கூரிய கத்தியால் ரயில் பயணிகளை கண்டபடி வெட்டிக் காயப்படுத்திய இளைஞர் ஒருவரைப் பொலீஸார் சுட்டு மடக்கிக் கைது செய்தனர்.
பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாகக் கூடுகின்ற Gare du Nord ரயில் நிலையத்தில் இன்று காலை 06.45 மணியளவில் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தது.
அதிக எண்ணிக்கையான பயணிகள் நிறைந்து காணப்பட்ட காலை வேளை,
சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பயணிகளைக் கத்தியால் தாக்கியுள்ளார். சுமார் ஆறு பேர் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகினர் என்றும் அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என்றும் முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன.
சம்ப இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்துப் பொலீஸாரும் தேசிய பொலீஸ் பிரிவினரும் விரைந்து செயற்பட்டு இளைஞரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொலீஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தால் தாக்குதலாளி காயமடைந்துள்ளார். அவர் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவரது நோக்கம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேலும் பலர் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தியதற்காக அதிகாரிகளையும்
பொலீஸ் பிரிவினரையும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.