பிரதமர் எலிசபெத் போர்ன் நேற்று வெளியிட்ட ஓய்வூதிய மறுசீரமைப்புத்
திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து
முதற்கட்ட வேலை நிறுத்தத்தையும் கண்டனப் பேரணிகளையும் நடத்தத்
தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு, (La Confédération française démocratique du travail - CFDT) தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (La Confédération générale du travail) ஆகிய நாட்டின் இரண்டு மிக முக்கியமான தொழிற்சங்கங்களுடன் FO, CFE-CGC, CFTC, Unsa, Solidaires ஆகிய தொழில் சங்கங்களும் மாணவர் இயக்கங்களும்
இணைந்து இந்த அழைப்பை விடுத்திருக்கின்றன.
பிரான்ஸில் அரசுக்கு எதிராக சகல தொழிற்சங்கங்களும் ஒரேசமயத்தில் ஒரே இயக்கமாக இணைந்து போராட்டத்தில் குதிப்பது கடந்த 12 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை
என்று தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்களது இந்த மாபெரும் இயக்கத்துடன் இணையுமாறு சோசலிஸக் கட்சி உட்பட சகல இடதுசாரிக் கட்சிகளும் தத்தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
முதலாவது கட்ட எதிர்ப்பு நடவடிக்கையாக எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை முழு அளவிலான வேலை நிறுத்தத்தில்
ஈடுபடுமாறு சகல துறைகளைச் சேர்ந்த
தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பெரிய தொழிற்சங்கமாகிய பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (La Confédération française démocratique du travail - CFDT) சார்பில் கருத்து தெரிவித்திருக்கும் அதன் செயலாளர்
நாயகம் லோறோன் பேர்ஜெ(Laurent Berger), கடந்த முப்பது ஆண்டுகளில்
செய்யப்படுகின்ற மிக மோசமான சீர்திருத்தம் இது என்று ஓய்வூதியத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
தீவிர இடதுசாரி ஜீன் லூக் மெலன்சோன் (Jean-Luc Mélenchon) "பிரெஞ்சுத் தொழிலாளர் சமூகத்தின் தீவிரமான பின்னடைவு" என்று இதனைக் கண்டித்திருக்கிறார்.
"இந்த நியாயமற்ற சீர்திருத்தத்தைத் தடுப்பதற்கான உறுதியை மனதில் கொள்ள வேண்டும்" என்று தீவிர வலதுசாரித் தலைவி மரின் லூ பென் (Marine Le Pen) பிரெஞ்சு மக்களைக் கேட்டிருக்கிறார் .
பிரதமர் எலிசபெத் போர்ன் நேற்றுச்
சமர்ப்பித்த ஓய்வூதியச் சீர் திருத்தத்
திட்டம், ஓய்வு பெறுகின்ற வயதை
வருடாந்தம் மூன்று மாதங்கள் என்ற கணக்கில் அதிகரிக்கிறது. அதாவது
எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி தொடக்கம் இந்த அதிகரிப்பின் படி 2027 இல் ஓய்வு பெறும் எல்லை 63 வயதும் மூன்று மாதங்களாகவும் இருக்கும். 2030 இல் 64 வயதை இலக்காகக் கொண்டு இந்த அதிகரிப்புச் செய்யப்படுகிறது.
தொழில்மயப்பட்ட நாடுகளில் ஆகக் குறைந்த ஓய்வூதிய வயது எல்லையைக் கொண்ட நாடாக பிரான்ஸ் விளங்குகின்றது. அதன் ஓய்வூதியம் பொருளாதாரச் செலவில் 14 வீதத்துக்கும் அதிகமான பங்கைக்
கொண்டுள்ளது.
ஐரோப்பாவில் அயல் நாடுகள் பலவும் இதேபோன்று ஓய்வு பெறும் வயது எல்லையை நீடித்து வருகின்றன
ஜேர்மனியில் 1947-1964 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களுக்கான
தற்போதைய சட்டபூர்வ ஓய்வு பெறும் வயது 65 ஆகும். 2027 முதல் அது நிரந்தரமாக 67 ஆக உயர்த்தப்படவுள்ளது. நாட்டில் எதிர்பார்க்கப்படும் ஆயுள் காலம் அதிகரித்து வருவதால் இந்த வயது வரம்பும் ஓய்வூதியச் செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குப் போதாது என்று குறிப்பிடப்படுகிறது.
அங்கு 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களது ஓய்வூதிய வயதை 69 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.