கட்டிடம் ஒன்றின் 11 ஆவது தளத்தில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்துள்ளான். இச்சம்பவத்தில் தொடர்புடைய 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பரிசின் புறநகரான Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு Avenue Boileau வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இருந்து காவல்துறையினருக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். 11 வயதுடைய சிறுவன் ஒருவன் அக்கட்டிடத்தின் 11 ஆவது தளத்தில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்துள்ளான்.

உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் அவசர சிகிசை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான்.

பின்னர் விசாரணைகளில், சிறுவனின் மாமா முறையுடைய 32 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குடும்ப வன்முறை ஒன்றின் முடிவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனை மேற்படி நபர் கத்தியை காண்பித்து அச்சுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. அத்தோடு சிறுவனை தள்ளி விழுத்தியுள்ளாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.