நேற்று புதன்கிழமை காலை Gare du Nord நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் காவல்துறையினரால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைதான நபர் தொடர்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்திய நபர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் எனவும், அவர் பிரான்சை விட்டு வெளியேற பணிக்கப்பட்டவர் (obligation de quitter le territoire français - OQTF) எனவும் அறிய முடிகிறது.
காவல்துறையினரின் காப்பங்களில் உள்ள ஆவணங்களில் தாக்குதலாளியின் கைரேகை மூலம் தேடப்பட்டதில், குறித்த நபர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சுக்கு வருகை தந்திருந்ததாகவும், அவர் புகலிட கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் - பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
தாக்குதலாளி 20 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை காலை 6.45 மணிக்கு Gare du Nord தொடருந்து நிலையத்துக்கு வருகை தந்த குறித்த நபர் சிறிய கத்தி ஒன்றின் மூலம் அங்கிருந்த பயணிகளை கண்மூடித்தனமாக தாக்கியிருந்தார். அதையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.