பரிசின் புறநகரான Pantin (93) நகரில் பேருந்து ஒன்று திருடப்பட்டிருந்த நிலையில், மிகுந்த சேதமடைந்திருந்த நிலையில் அது மீட்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் Eglise de Pantin தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த RATP நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்றே திருடப்பட்டுள்ளது. பயணிகளற்று மறுநாள் காலை சேவைகளுக்கு தயாராக இருந்த 147 ஆம் இலக்க பேருந்தினை நபர் ஒருவர் திடீரென இயக்கி அங்கிருந்து கொண்டு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த ஊழியர் ஒருவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த பேருந்தினை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
பத்து நிமிடங்கள் கழித்து Romainville நகரில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் இடித்துக்கொண்டு சிக்கி நிப்பதைப் பார்த்துள்ளனர். பலத்த சேதமடைந்த நிலையில் இருந்த குறித்த பேருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

பேருந்தினை திருடிச் சென்ற நபர் குறித்த விபரங்கள் எதுவும் அறிய முடியவில்லை. அவரை கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.