பாரிஸ் நகரில் சனசந்தடி நிறைந்த பத்தாவது நிர்வாகப் பகுதியில் (10e arrondissement) இன்று பகல் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர். சிலர் காயங்களுக்கு ஆளாகினர். சுமார் 70 வயதான நபர் ஒருவர் முதலில் அங்குள்ள குர்திஷ்

மக்களது பண்பாட்டு நிலையம்(Kurdish cultural centre) மீதும் பின்னர் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றின் மீதும் துப்பாக்கியால் சகட்டுமேனிக்குச் சுட்டார் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.



நத்தார் வியாபாரம் களை கட்டியிருந்த சமயத்தில் பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இத் தாக்குதலால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பீதியும் காணப்பட்டது.



பொலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்து மூடித்

தாக்குதலாளியைக் காயங்களுடன் கைது செய்தனர் என்று அறிவிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா

அந்தப் பகுதிக்கு வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டார்.
பாரிஸ் நகரில் குர்திஷ் மக்களது நலனுக்காகச் செயற்பட்டு வருகின்ற

தொண்டு நிறுவனமாகிய "Centre Ahmet Kaya" என்ற பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த குர்திஷ் செயற்பாட்டாளர்கள் மூவரே தாக்குதலிலுக்கு இலக்காகி உயிரிழந்தள்ளனர் என்று கூறப்படுகிறது. 69 வயதான தாக்குதலாளியின் நோக்கம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. ஆனால் ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறைப் பணியாளராகிய அவர், ஏற்கனவே குடியேறிகள் மீதான இரண்டு கொலை முயற்சிச் சம்பவங்களுக்காக விசாரணையின் கீழ் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலாளியின் அடையாளங்களும் கடந்த காலச் செயற்பாடுகளும்

தாக்குதலில் தீவிர வலது சாரி இனவாத நோக்கம் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.



காயமடைந்தவர்களில் இருவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்

பட்டுவருகிறது. மேலும் இருவர் படுகாயங்களுக்கு இலக்காகி உள்ளனர். குர்திஷ் இனத்தவர்கள் அதிகமாகக் குடியிருக்கும் அந்தப் பகுதியில் இன்றைய தாக்குதல் அவர்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.



அமைதியாக வாழ்க்கை நடத்துகின்ற குர்திஷ் மக்களைப் பாதுகாப்பதில் பாரிஸ் பொலீஸார் மீண்டும் ஒரு முறை

தவறிவிட்டனர் என்று குர்திஷ் பண்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் செய்தி ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.



தாக்குதல் தொடர்பான விசாரணைகளைப் பாரிஸ் சட்டவாளர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.