ஆழ் கடலில் இருந்து வழிதவறி வந்து செய்ன் நதியில் மாட்டிக் கொண்ட பெலுகா திமிங்கிலத்தை நிபுணர்கள் கிரேன் உதவியுடன் நீருக்கு வெளியே தூக்கி எடுத்துள்ளனர். இரவிரவாக நடைபெற்ற இந்த மீட்பு முயற்சி அதிகாலை வெற்றியளித்தது.
ஆனால் அதன் உயிராபத்து அச்சம் இன்னும் நீடிக்கிறது.
திமிங்கிலம் சுழியோடிகளது உதவியுடன் வலை மூலம் தூக்கி வெளியே எடுக்கப்பட்டு மிதவைப் படகு ஒன்றில் வைத்து டசின் கணக்கான மிருக வைத்தியர்களால் உடனடிப் பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
மிக நீண்டதும் - தொழில்நுட்பச் சவால்கள் நிறைந்ததுமான இந்த மீட்பு நடவடிக்கை தற்போது நிலவும் கடும் வெப்ப நிலையைக் கருத்திற் கொண்டே இரவு நேரத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
நதிக்கு வெளியே தூக்கப்பட்டு
பின்னர் குளிரூட்டப்பட்ட பாரிய
வாகனம் (refrigerated truck) ஒன்றினுள் ஏற்றப்பட்ட பெலுகா
தரைவழியாக சுமார் 160 கிலோ மீற்றர்கள் தொலைவில் நாட்டின் வடகிழக்குக் கரையோரத்தில் உள்ள Ouistreham (Calvados department - Normandy) துறைமுகப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட இருந்தது. அங்கு கடலுடன் அண்டிய உப்பு நீர் நிலைக்குள் விடப்பட்டு மூன்று தினங்கள் அதன் உடல் நிலை பரிசோதிக்கப்படும். தீவிர கண்காணிப்புக்குப் பின்னர் அதன் ஆரோக்கியத்தைப் பொறுத்து அது பின்னர் ஆங்கிலக் கால்வாயில்
விடப்படும்.
பாரிய கடல்வாழ் உயிரினம் ஒன்றை அதற்கு ஊறு விளைவிக்காமல் பத்திரமாக உயிருடன் நீருக்கு வெளியே எடுத்துத் தரைவழியாக இடம்மாற்றிய இது போன்ற முயற்சி அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் பிரான்ஸைப் பொறுத்தவரை இதற்கு முன் நடந்திராத-முன் அனுபவம் ஏதுமற்ற ஆபத்தான - ஒரு பெரும் மீட்பு நடவடிக்கை இது. ஆயினும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
பெல்கா திமிங்கிலம் கடந்த ஒரு வார காலமாக நோர்மென்டி பகுதியில் l'Eure என்ற இடத்தில் செய்ன் நதிக்குள் வந்து சிக்கிக் கொண்டது. அதனை நதி வழியே மீண்டும் கடலை நோக்கித் திருப்பி விடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. வழங்கப்பட்ட உணவை உண்ண மறுத்து வந்ததால் அது சோர்வுற்று உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொண்டது. மருத்துவ நிபுணர்கள் அதற்கு விற்றமின் ஊட்டம் செலுத்தி அதன் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அது மீண்டும் கடலுக்கு நீந்திச் செல்வது சாத்தியமில்லை என்ற நிலையிலேயே நான்கு மீற்றர்கள் நீளமும் சுமார் 800 கிலோ எடையும் கொண்ட திமிங்கிலத்தை நதி நீரில் இருந்து வெளியே தூக்குவது என்ற முடிவை அதிகாரிகள் எடுத்தனர்.
திமிங்கிலத்தைப் பாதுகாக்க முயற்சி செய்யாமல் இருப்பதை விட ஏதாவது முயற்சிப்பதே சிறந்தது" - என்று மீட்பு நடவடிக்கையை அறிவித்த l'Eure மாவட்ட பொலீஸ் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
சவாலான இந்த மீட்புப்பணியில்
நாற்பது தீயணைப்புப் படை வீரர்கள், கடல்வாழ் உயிரினங்கள் சார்ந்த வல்லுநர்கள்,அறிவியலாளர்கள், மிருக வைத்தியத் துறை நிபுணர்கள்,சுழியோடிகள், கடல் மேய்ப்பன் (Sea Shepherd)என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உட்பட விலங்குகளைப் பாதுகாக்கும் இயக்கத்தின் தொண்டர்கள் உட்படப் பெரும் எண்ணிக்கையானோர் பங்கு பற்றினர்.
கடந்த சில நாட்களாக திமிங்கிலத்தை மீட்கும் இந்த முயற்சி மீது நாட்டின் முழுக் கவனமும் திரும்பியிருந்தது. தனிப்பட்டவர்களும் விலங்குகளுக்காகச் செயற்படும் தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து மீட்பு நடவடிக்கைக்கான நிதி உதவிகளை அள்ளி வழங்கியிருந்தனர்.
அரிய ஆர்டிக் கடல் உயிரினமான பெலுகா மீண்டும் கடலைச் சென்றடைந்தது என்ற மகிழ்ச்சிச் செய்தியைக் கேட்பதற்காக சூழலியலாளர்களோடு சேர்ந்து
முழு நாட்டு மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.