பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் ஆர்சனல் அணிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற மாபெரும் ஐரோப்பியச் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் போது, பாரிஸ் நகர வீதிகளில் எதிர்பாராத விதமாகப் பெரும் கலவரம் வெடித்தது. வெற்றிக் கொண்டாட்டத்திற்காக இலட்சக்கணக்கான ரசிகர்கள் வீதிகளில் திரள்வார்கள் என முன்பே கணித்திருந்த நகர நிர்வாகம், சுமார் எண்ணாயிரம் காவல்துறையினரைக் குவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இருப்பினும், மைதானத்திற்கு வெளியேயும் நகரத்தின் முக்கிய வீதிகளிலும் நிலைமை கைமீறிப் போனது.
முக்கியமாக, போட்டி பெரிய தெரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட் ட 'பார்க் டெஸ் பிரின்சஸ்' மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், புகழ்பெற்ற 'சாம்ப்ஸ்-எலிசே' வீதியிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மாலையிலிருந்தே திரண்டனர். ஒரு கட்டத்தில் இ ரசிகர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் உருவானது. கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். கலவரக்காரர்கள் 'போர்ட் து செயின்ட்-கிளவுட்' பகுதியில் வீதிகளில் இருந்த மிதிவண்டிகளைக் குவித்து வைத்துத் தீ வைத்ததால், அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொளுந்துவிட்டு எரிந்த தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இந்த வன்முறை வெறியாட்டத்தில் 'வெர்சாய்ஸ்' வீதியில் அமைந்திருந்த ஓர் வெதுப்பக்கமும் (Bakery) உணவகமும் அடித்து நொறுக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் போராட்டத்தில் காவல் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். பதற்றத்தைத் தணிக்கக் காவல்துறையினர் வீதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரைச் சோதனை செய்தனர். இதன்போது, வன்முறையில் ஈடுபட்ட நாற்பத்தைந்து பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் பதின்மூன்று பேர் தீவிரத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய தீவிரச் சோதனையில், சாம்ப்ஸ்-எலிசே பகுதிக்கு அருகே மிக ஆபத்தான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக, அலுமினியத் தாள்களும் அமிலப் புட்டிகளும் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. இவற்றை ஒன்றாகக் கலப்பதன் மூலம், பல மீட்டர்கள் தூரம் வரை அமிலத்தைச் சிதறடிக்கும் பயங்கரமான வெடிப்புகளை ஏற்படுத்தக் கலவரக்காரர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.
இது தவிரப் பல புகைக்குண்டுகளும், சட்டவிரோத வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரவு 22.00 மணியை தாண்டியும் வீதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால், பாரிஸ் நகரம் முழுவதும் தொடர்ந்து பதற்றத்திலேயே இருக்கிறது .