வரும் நாட்களில் பால் மற்றும் பாற் பொருள்கள், இறைச்சி என்பவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடும் வரட்சி, கால்நடைத் தீவனங்களது விலை உயர்வு
என்பன காரணமாகப்
பாற் பண்ணைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் பாலின் விலையை அதிகரிக்குமாறு நாட்டின் விவசாய அமைப்புகளது சம்மேளனம் பண்ணையாளர்களைக் கேட்டிருக்கிறது.
பிரான்ஸில் மூன்று கட்டங்களாக கடும் அனல் வெப்பநிலை(canicule) தாக்கியுள்ளது. இந்த வாரம் நான்காவது வெப்ப அனலை நாடு
எதிர்கொண்டுள்ளது. மே மாதம் முதல் நீடிக்கின்ற வெப்பம் நாடு முழுவதும் வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராத வரட்சியையும் தண்ணீர்த் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயப் பண்ணைப் பிரதேசங்களில் கால்நடைகளின்
மேய்ச்சல் நிலங்கள்-புல் வெளிகள் - வரண்டு கருகிவிட்டன. மாடுகள் மேய்ச்சல் நிலங்களை இழந்துள்ளன. இதனால் அவற்றுக்குக் கால்நடைத் தீவனங்களை உணவாகக் கொடுக்க
வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அது பண்ணையாளர்களைப் பொருளாதார ரீதியில் பெரிதும்
பாதித்துள்ளது. கால்நடைகளைக் குறிப்பாக மாடுகளைக் குறைக்க வேண்டிய அல்லது அவற்றை விற்றுவிட வேண்டிய கட்டாயம்
அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக Hauts-de-France, Grand Est, Paca மற்றும் Occitanie பிராந்தியங்களிலேயே புல் வெளிகள் வரண்டு கருகியுள்ளன
கொரோனா பெருந் தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே பால் மற்றும் தயிர் வகைகளது (produits laitiers) விலைகள் கடந்த 2021 ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரையான காலப் பகுதியில் 4,5%
வீதத்தால் உயர்ந்துள்ளன.
பெட்டி மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட அரைவாசி ஆடை நீக்கப்பட்ட பால் (demi-écrémé)
4,5% வீதமும், பட்டர் வகைகளின்
(le beurre) விலைகள் 9,8% வீதமும், சீஸ் வகைகள் (fromage) 5,2%வீதமும்
விலை அதிகரிப்பைச் சந்தித்திருந்தன. தற்போது வரட்சி
காரணமாக உருவாகியுள்ள நெருக்கடி அவற்றின் விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு வழிகோலியுள்ளன.