நாற்பது தடவைகள் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு, நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மார்செயின் (Marseille) 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. காலை 4.20 மணி அளவில் இங்குள்ள வீதி ஒன்றில் வைத்து ஆயுததாரிகள் இருவர் 39 வயதுடைய ஒருவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் இருவர், குறித்த நபர் மீது நாற்பது தடவைகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு மணிநேரம் முன்பாக அதிகாலை 2 மணி அளவில், 14 ஆம் வட்டாரத்தில் உள்ள La Paternelle பகுதியில் பல தடவைகள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்தனர். அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட யார் என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அச்சம்பவம் இடம்பெற்ற அடுத்த சிலமணிநேரத்தில் மேற்படி துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து 43 துப்பாக்கி ரவைகள் (7.63 மில்லிமீற்றர்) கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்