பிரான்ஸில் புதிய கல்வியாண்டு தொடங்கும் சமயத்தில் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிக் கொடுப்பனவுக்கு (l'allocation de rentrée scolaire-ARS) மேலதிகமாக இந்த முறை விசேட தொகையாக 100 ஈரோ( la prime exceptionnelle de rentrée) கிடைக்கவுள்ளது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாகக் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அடுத்தே பாடசாலை உதவித் தொகையை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 100 ஈரோ மேலதிக கொடுப்பனவு உரிய குடும்பங்களுக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் வழக்கமாக வழங்கப்படுகின்ற கொடுப்பனவு இந்த மாதம் 16 ஆம் திகதி முதல் பெற்றோரது வங்கிக் கணக்குகளுக்குக் கிடைக்கும். 6முதல் 18 வயது வரையான மாணவர்களுக்கான தொகைகள் இந்த முறை 4 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி - *6-10 வயதுடைய மாணவர்களுக்கு தலா 392.05 ஈரோக்களும் - *11-14 வயதுவரையான மாணவர்களுக்கு 413.69 ஈரோக்களும் - *15-18 வயது வரையானோருக்கு 428.02 ஈரோக்களும் உதவு தொகை கிடைக்கும். 100 ஈரோ மேலதிக கொடுப்பனவு பின்வரும் வருமான வரம்பின் (2020) அடிப்படையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். பள்ளி செல்லும் ஒரு பிள்ளையைக் கொண்ட குடும்பத்தின் வருட வருமானம் 25,370 ஈரோக்களுக்கு மேற்படாதிருத்தல் - அதேபோன்று இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் வருமான வரம்பு 31,225 ஈரோக்களுக்குக் குறைவாகவும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு 37.080 ஈரோக்களுக்கு குறைவாகவும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு 42.935 ஈரோக்களுக்குக் குறைவாகவும் வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.