பிரான்ஸில் வருடாந்தம் வீட்டு வரியுடன்(taxe d'habitation) சேர்த்து அறவிடப்படுகின்ற தொலைக்காட்சி உரிம வரியை (l’audiovisuel public) நீக்குவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை
ஈடுசெய்வதற்கான அரசு உதவிகளை உள்ளடக்கிய நிதிச் சட்ட மூலத்தின் மீதான விவாதங்களின் போது இந்தத் தொலைக்காட்சி வரி நீக்கச் சட்டநகல் அதன் முதல் வாசிப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

பிரான்ஸின் வீடுகளில் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்கான உரிம வரியாக ஆண்டு தோறும் 138 ஈரோக்கள் அறவிடப்படுகின்றது. புதிய சட்டத்தின் மூலம் சுமார் 85 வீதமான வீடுகளுக்கு உரிம வரி நீக்கப்படவுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 3.2 பில்லியன் ஈரோக்கள் இழப்பு ஏற்படும். உரிம வரி இழக்கப்படுவதால் பொது ஒலி-ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு 
இழப்பீடுகளை வழங்கும். 

வீட்டு வரியுடன் (taxe d'habitation) சேர்த்து  தொலைக்காட்சி ஊடகங்களுக்கான (contribution à l’audiovisuel public) வரியையும் நீக்கப்போவதாக அதிபர் மக்ரோன் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி வீட்டு வரி அண்மைய ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. அதே போன்று 
தொலைக்காட்சி வரியும் இல்லாதொழிக்கப்படுகிறது.