தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை அண்டிய Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne ஆகிய புற மாவட்டங்கள் கடந்த 2ஆம் திகதி முதல் வரட்சி விழிப்பு நிலையின் கீழ் (vigilance sécheresse) கொண்டுவரப்பட்டுள்ளன.

நான்கு கட்ட வரட்சி நெருக்கடித் திட்டத்தின் முதலாவது கட்டமாக 
பாரிஸ் பிராந்தியப் பொலீஸ் தலைமையகம் இந்த விழிப்பு நிலையை அறிவித்திருக்கிறது. 
குடி தண்ணீர் விநியோகம் தடையின்றி வழமை போன்று இடம்பெறும். ஆனால் தண்ணீரை வீணாக்காமல் பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர். பாரிஸ் நகரசபையின் குடி தண்ணீர் சேவைப் பகுதி தண்ணீரை விரயமாக்காமல் பாவிக்கின்ற வழிமுறைகளைத் தனது இணையத் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. 

பாரிஸ் நகரம் உட்பட பாரிஸ் பிராந்தியத்துக்கான குடி தண்ணீரைச் சேமித்து வைத்து வழங்கும் கிடங்குகளில் போதியளவு தண்ணீர் உள்ளது. உடனடியாக நீர் வெட்டை அமுல் செய்யவேண்டிய நிலை ஏற்படாது. ஆனால் அந்த சேமிப்பு கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட கையிருப்பு ஆகும். அண்மைக்காலத்தில் நீடிக்கின்ற 
வெப்ப அனல் காரணமாக பாரிஸ் 
பிராந்திய நீரேரிகள், ஆறுகள் உரிய 
நீர் மட்டத்தை இழந்துவருகின்றன. 
எனவே வருங்காலத்தில் குடி தண்ணீர்க் கையிருப்புக் குறையக்
கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே 
தண்ணீர்ப் பாவனையை இப்போதிருந்தே சிக்கனமாக்கிக் கொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விலைமதிப்பற்ற தண்ணீர் வளத்தைப் பேணுவதற்கு நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய சிக்கன நடவடிக்கைகளைப் பாரிஸ் நகரத் துணை முதல்வர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார்.குளிப்பதற்கு  50 லீற்றர்களுக்குக் குறைவான நீரைப் பயன்படுத்துங்கள். போதியளவு உடுதுணிகள் சேர்ந்த பின்னரே சலவை இயந்திரங்களை இயக்குங்கள். அவ்வாறே சமையலறைப் பாத்திரங்களையும் கழுவும் போது 
நீர் விரயத்தைக் குறையுங்கள். 
குழாய் நீரைத் திறந்து விட்டவாறு பல் துலக்காதீர்கள்-இவ்வாறு சில ஆலோசனைகள் நகரவாசிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளன.

சில நகரசபைப் பிரிவுகளில் பூங்காக்கள், புல் வெளிகளுக்குப் பகலில் நீர் விசுறுவது நிறுத்தப்பட்டுள்ளது. மாலையிலும் இரவு நேரத்திலும் மட்டுமே பூங்காக்களுக்கும் வீட்டுத் தோட்டங்களுக்கும் நீர் பாய்ச்சுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அழகுக்காக நீர் விசுறும் நீர் நிலைகள் நிரப்பப்பட மாட்டாது. 
நகரசபைகளது வாகனங்களைக் கழுவுவதும் குறைக்கப்படுகிறது. 
வீதிகளை நீர் கொண்டு கழுவும் 
பணிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்போதைய வரட்சியும் தண்ணீர்த் 
தட்டுப்பாடும் நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்பு சந்தித்திராத ஒரு நெருக்கடி என்று வர்ணிக்கப்படுகிறது. 

தொடர்ச்சியான வெப்பம் காரணமாக நாடு முழுவதும் சுமார் நூறு நகரசபைப் பிரிவுகளில் குழாய் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பாவனையாளர்களுக்கு
பவுஸர்கள் மூலம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சனத்தொகை குறைந்த பிரிவுகளில் 
குடிப்பதற்கான தண்ணீரைப் போத்தல்களில் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சூழலியல் அமைச்சர் கிறிஸ்தோப் பெச்சு (Christophe Béchu) நாட்டின் தெற்குப் பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்ட Var என்ற மாவட்டத்துக்கு விஜயம் செய்த போது தெரிவித்திருக்கிறார்.