சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமெட் பென் சல்மான் (Mohammed Ben Salmane) பாரிஸுக்கு வருகை தந்துள்ளார்.
அதிபர் மக்ரோன் இன்று வியாழக்கிழமை அவரை எலிஸே மாளிகையில் வரவேற்று விருந்துபசாரம் அளித்துள்ளார்.
இளவரசருடனான பேச்சுக்களில் ஜரோப்பா எதிர்கொண்டுள்ள பெரும் எரிசக்தி நெருக்கடி தொடர்பான விடயம் முக்கிய இடம் பிடித்துள்ளது.
2018 இல் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி படுகொலைச் சம்பவத்துடன் இளவரசர் சல்மானுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்காக உலகெங்கும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவர் மீது படுகொலைக் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையில்
இளவரசர் பிரான்ஸுக்கு வருகை தந்திருப்பது மனித உரிமை இயக்கங்களின் கடும் எதிர்ப்பலைகளைக் கிளப்பிவிட்டுள்ளது.
அமெரிக்காவில் தலைமறைவாக வாழ்ந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி அங்கிருந்தவாறு சவுதி ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2018 இல் ஆவணம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக துருக்கியில் உள்ள சவுதி அரேபியத்
தூதரகத்துக்குச் சென்ற அவர் உள்ளே நுழைந்த பிறகு காணாமற்போய்விட்டார். அவர் அங்கு வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டு உடல் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று துருக்கி அரசு தெரிவித்திருந்தது. அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.
தடயம் இன்றிக் கொலைகளைப் புரிவதில் நிபுணத்துவம் பெற்ற கொலைக் குழு ஒன்று இளவரசர் சல்மானின் உத்தரவின் பேரில் சவுதியில் இருந்து துருக்கிக்கு விமானத்தில் வருகை தந்து அங்குள்ள தூதரகத்தினுள் வைத்துக்க ஷோக்கியைத் தீர்த்துக் கட்டியது
என்பதை நிரூபிக்கும் சான்றுகள் பல அச்சமயத்தில் வெளியாகியிருந்தன. அதனால் இளவரசரை ஒரு கொலையாளி என்று உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே இளவரசரது வெளிநாட்டு விஜயங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக எழுந்துள்ள எரிசக்தி நெருக்கடியைச்சமாளிப்பதற்காக பிரான்ஸ் மத்திய கிழக்கு எண்ணெய் வள நாடுகளுடன் உறவுகளை நெருக்கமாக்க வேண்டிய அவசரம் எழுந்துள்ளது. அந்த அடிப்படையிலேயே சவுதி இளவரசரை மக்ரோன் எலிஸே மாளிகைக்கு அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.
கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட இளவரசரோடு மக்ரோன் நேசக்கரம்நீட்டிக் குலாவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மனித உரிமை அமைப்புகள் சீறியுள்ளன. மனித உரிமைகள் தொடர்பாகவும் சவுதி இளவரசரோடு மக்ரோன் பேச வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
"சவுதி இளவரசருடனான பேச்சுவார்த்தை இந்தக் கட்டத்தில்மிக அத்தியாவசியமானது. அதற்காக நாங்கள் அவரோடு முழு மனதுடன் பேசுகிறோம் என்று அர்த்தமில்லை " - என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எம்பிஎஸ் (MBS) எனச் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற சர்ச்சைக்குரிய இளவரசர் மொஹமெட் பென் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியில் நேரில்சந்தித்தமை தெரிந்ததே.
ரஷ்யா-உக்ரைன் போர் உலக அரசியலில் சவுதி அரேபியா போன்ற எண்ணெய் மற்றும் எரிசக்தி வள நாடுகளுக்கு மீண்டும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வரவிருக்கும் குளிர் காலப்பகுதிக்கு முன்பாக ரஷ்ய எரிவாயுவுக்கான
மாற்று ஏற்பாடுகளை உறுதி செய்யவேண்டிய அவசரத்தில் உள்ள ஜரோப்பிய நாடுகள் வேறு வழியின்றிச் சவுதி அரேபியாவின் தயவை நாடுகின்றன.