பிரெஞ்சு கிராமம் ஒன்றில் வாகனங்களில் பயணிக்கும் போது சிகரெட் புகைக்க தடை விதிக்கப்பட்ட அதிசய நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

Gard மாவட்டத்தில் உள்ள Langlad எனும் சிறு கிராமத்திலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் வாகனங்களில் பயணிக்கும் போது சிகரெட் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிகரெட் புகைத்தால் அவர்களுக்கு €15 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்படும் என அக்கிராம முதல்வர் அறிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாத இறுதி வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் சிகரெட் புகைக்க தடை??!!

குறித்த கிராமமானது பைன் மரக்காடுகள் நிறைந்ததாகும். இந்த கோடைகாலத்தில் சிகரெட் புகைத்துவிட்டு வெளியே வீசுவதால் காட்டுத்தீ பரவும் ஆபத்துள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் சிகரெட் துண்டினால் பல தடவைகள் அங்கு காட்டுத்தீ பரவியிருந்தது.

அதையடுத்து, இவ்வருடத்தில் அதுபோன்ற காட்டுத்தீ பரவல் இடம்பெறாமல் தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது