வாசனை தரும் பேனாக்கள், பென்சில்கள், அழிப்பான்கள் (les stylos ou les gommes parfumés) 
மற்றும் மினுமினுப்புப் பசைகள் 
(La colle pailletée) ஆகியவற்றில் 
கலந்துள்ள நச்சு இரசாயனப் பொருள்கள் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆபத்தாகலாம். 

எனவே பள்ளி உபகரணங்களை வாங்கும் போதும் அவற்றைப் பயன்படுத்தும்போதும் மிக அவதானமாக இருக்குமாறு 
பிரான்ஸின் சுகாதாரப் பாதுகாப்பு 
நிறுவனம் (L’Agence nationale de sécurité sanitaire-ANSES) எச்சரிக்கை 
ஒன்றை வெளியிட்டுள்ளது. 

விதம் விதமான பல்வேறு பாடசாலை
உபகரணங்கள் சந்தைகளுக்கு வந்துள்ளன. அவற்றில் சில ஐரோப்பியத் தர நிர்ணயத்துக்கு
உட்பட்ட தயாரிப்புகள் அல்ல என்பது
தெரியவந்துள்ளது. எனவே தற்போதைய விடுமுறைக் காலத்தில் அடுத்த பாடசாலைக்
கல்வியாண்டுக்கான உபகரணங்களை( fournitures scolaires) வாங்கும் போதும் 
அவற்றைப் பயன்படுத்தும் போதும் 
மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 

இந்தப் பொருள்களைச் சிறுவர்கள் 
விளையாட்டு உபகரணங்களைப் போன்று தம்மோடு நெருக்கமாகக்
கையாள்கிறார்கள். அவற்றின் வண்ணங்கள், வாசனைகளால்
ஈர்க்கப்பட்டு முகரவும் வாயில் கடிக்கவும் செய்கின்றனர். பென்சில் 
அழிப்பான்களை வாயில் வைப்பது
கடிப்பது அவர்களின் வழக்கமான பழக்கமாக உள்ளது. ஆனால் இந்தப் 
பொருள்களில் உடலுக்கு ஆபத்தான
பதார்த்தங்கள்(dangerous chemical) பல கலந்துள்ளன. அளவு, கட்டுப்பாடுகள் மீறித் தயாரிக்கப்படுகின்ற இரசாயனம் கலந்த பள்ளி உபகரணங்கள் சிறுவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தலாம். எனவே விளையாட்டுப் பொருள்களைப் பரிசோதனை செய்வது போன்று 
பாடசாலை உபகரணங்களையும் 
அடிக்கடித் தரப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் ஐரோப்பிய 
அதிகாரிகளைக் கேட்டுள்ளது. 

வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக மலிவான விலைக்கு உபகரணங்களை வாங்க முற்படும் போது அவற்றின் தரங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று நோய் முடக்கங்கள், உக்ரைன் போர் என்பன ஏற்படுத்திவரும் பாதிப்புகளால் மூலப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அதனால் மாணவர்களுக்கு அவசியமான பாடசாலை உபகரணங்களின்
விலைகளும் அதிகரித்துள்ளன.