பிரதமர் Elisabeth Borne இன்று பாராளுமன்றத்தில் பொது அறிக்கையினை வாசித்தார். ஆளும் தரப்பு கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் சமமாக உள்ள பாராளுமன்றத்தில் ஒன்றரை மணிநேரம் பிரதமர் தனது அறிக்கையினை வாசித்தார். அதன்போது பல சலுகைகளையும் அறிவித்தார்.

நடப்பு ஆண்டில் எவ்வித வரி அதிகரிப்பும் இல்லை என மகிழ்ச்சியான செய்தியுடன் ஆரம்பித்த பிரதமர், அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக செயற்பட அழைப்பு விடுத்திருந்தார்.

காலநிலை தொடர்பான யுத்தத்தில் நாம் வெற்றிபெறுவோம் எனவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய திட்டம் ஒன்றை செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பெற்றோர்களில் ஒருவரை மட்டும் தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கான உதவியினை அதிகரிக்கவும், மருத்துவத்துறையில் வெற்றிடமாக உள்ள 50,000 தாதியினர் மற்றும் மருத்துவர்களின் இடங்களை நிரப்புவதற்கும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, புதிதாக 200 ஜொந்தாமினர்கள் பணிக்கு சேர்க்கப்பட உள்ளதாகவும், 11 புதிய நடமாடும் காவல்துறையினர் குழுக்களையும் உருவாக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

அத்துடன், முதியோர் பாதுகாப்பு, இராணுவத்துக்கான சலுகைகள் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அறிவித்தார்.

தனது அறிக்கையினை வாசித்து முடிக்கும் போது, யுத்தத்தில் இறந்த பிரெஞ்சு இராணுவத்தினருக்கு தமது அஞ்சலியை செலுத்தியதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்தார். அவரது உரை நிறைவடைந்த போது பாராளுமன்றத்தில் நீண்ட நேரம் கைதட்டல்கள் ஒலித்தது.