அண்மையில் சென் நதியில் இருந்து இராட்சத திமிங்கிலம் ஒன்றினது உடல் மீட்கப்பட்டிருந்தது. உடல்நலக்குறைவினால் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட குறித்த திமிங்கிலத்தின் தலையில் தற்போது துப்பாக்கி ரவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மே மாத ஆரம்பத்தில் ஆங்கிலக்கால்வாயில் இருந்து இராட்சத திமிங்கிலம் ஒன்று சென் நதிக்குள் நுழைந்திருந்தது. உடல்நலக்குறைவாக இருந்த அந்த திமிங்கிலத்தினை சென் நதியில் இருந்து மீண்டும் கடலுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் மே மாத இறுதியில் குறித்த திமிங்கிலம் இறந்த நிலையில் சென் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தது.
பின்னர் திமிங்கிலத்தின் உடல் உடற்கூறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அதையடுத்து, திமிங்கிலத்தின் மண்டையோட்டில் துப்பாக்கி ரவை ஒன்று துளைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து, திமிங்கிலத்தின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.
தலையில் துப்பாக்கி ரவை உள்ளதை அடுத்து கடல் உயிரினங்களுக்கான பாதுகாப்பு அமைப்பான Sea Shepherd நிறுவனம் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. ஜீவராசிகள் மீது கரிசனையற்று நடப்பதாகவும், அதை அழிப்பதற்கு முற்படுவதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தலையில் துப்பாக்கி குண்டு இருப்பதாக மட்டுமே உடற்கூறு பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமிங்கிலத்தின் இறப்புக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.