இளைஞன் ஒருவன், கைக்கடிகாரம் ஒன்றை கொள்ளையடிப்பதற்காக நபர் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். அவனை பரிசைச் சேர்ந்த காவல்துறையினர் கைது செய்தனர்.

நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணி அளவில் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் காவல்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 17 வயதுடைய ஒருவன் மெர்சடைஸ் நிறுவனத்தின் மகிழுந்து ஒன்றில் பயணிப்பதை பார்த்துவிட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் அவனை தடுத்து நிறுத்தினர்.

அவனது கைகளில் 10,000 யூரோக்கள் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றும், புதிய தொலைபேசி ஒன்றும் இருந்துள்ளது. இளைஞன் மீது சந்தேகம் எழ, அவன் செலுத்திவந்த மகிழுந்து தொடர்பாக தகவல்களை பரிசோதித்துள்ளனர். அப்போது குறித்த மகிழுந்து திருடப்பட்ட மகிழுந்து என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞன் சில நிமிடங்களுக்கு முன்னர், பரிஸ் 8 ஆம் வட்டாரத்தின் சோம்ப்ஸ் எலிசேக்கு அருகில் உள்ள Rue de la Boetie வீதியில் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டதாகவும், 30 வயதுடைய ஒருவரின் கழுத்தை நெரித்து அவரிடம் இருந்து குறித்த கைக்கடிகாரத்தையும், தொலைபேசியையும் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

கழுத்து நெரிக்கப்பட்ட குறித்த நபர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞன் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.