தற்போது விற்பனையில் இருக்கும் சிவப்பு முத்திரைகள் விரைவில் நிறுத்தப்பட்டு, புதிய வடிவில் நடைமுறைக்கு வரும் என பிரெஞ்சு தபால் துறை (la poste) அறிவித்துள்ளது.
அதிவேகமாக கடிதங்களை அனுப்ப பயன்படுத்தப்பட்ட இந்த சிவப்பு முத்திரைகள் வரும் ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்படுகிறது. முன்னுரிமை தபால்களுக்கு (lettre prioritaire) என வழங்கப்படும் இந்த முத்திரைகளுக்கு பதிலாக E-Lettre என அழைக்கப்படும் புதிய வசதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
அதன்படி, இரவு 8 மணி வரை இந்த அவசரகால கடிதத்தினை தபாலகத்தில் சேர்க்க முடியும். அப்படி அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது ஆவணங்கள், உரியவரின் அனுமதியோடு டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு, பெறுனர் முகவரி அமைந்துள்ள இடத்துக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு அனுப்பப்படும்.
இணையம் மூலம் பெறப்பட்ட அவ்வகை கடிதங்களை Print செய்து, தபாலுறையில் இட்டு, குறிப்பிட்ட முகவரியில் சேர்க்கப்படும். காலையில் அனுப்பப்படும் இவ்வகை கடிதங்கள் அன்றைய நாளிலேயே விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை E-Lettre கடிதம் அனுப்புவதற்காக 1.49 யூரோக்கள் (1 - 3 பக்கங்கள்) அறவிடப்படும். தற்போது பாவனையில் உள்ள சிவப்பு முத்திரைகளுக்கு 1.43 யூரோக்கள் கட்டணம் அறவிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.