மகிழுந்து ஒன்றுக்குள் மறந்துவிடப்பட்ட 14 மாத குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை இச்சம்பவம் Pyrenees-Atlantiques இல் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இங்குள்ள அலுவலகம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து 14 மாத கைக்குழந்தை ஒன்று மூச்சடக்கி பலியாகியுள்ளது.

குழந்தையின் தந்தை குறித்த அலுவலகத்தில் பணிபுரியும் நிலையில், நேற்று காலை குழந்தையை பராமரிப்பு நிலையத்தில் இறக்கிவிட அவர் மறந்துள்ளார். குழந்தையுடன் அலுவலகத்துக்கு வந்த அவர், தரிப்பிடத்தில் மகிழுந்தை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள் சென்றுள்ளார்.

பராமரிப்பு நிலையத்துக்குச் சென்ற குழந்தையின் தாய், அங்கு அவரது குழந்தை இல்லை என்பதை அறிந்துகொண்டதன் பின்னர், அவரது கணவருக்கு அழைப்பு எடுத்துள்ளார். அதன் பின்னரே குழந்தை மகிழுந்துக்குள் இருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவங்களின் முடிவில் குழந்தை மூச்சடக்கி பலியாகியுள்ளது. தீயணைப்பு படையினர் பலத்த முயற்சிகள் மேற்கொண்டும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.