Gironde மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெரும் காட்டுத்தீயினால் இதுவரை 4,000 ஹெக்டேயர்களுக்கு மேல் எரிந்து சாம்பலாகியுள்ளது. குறித்த மாவட்டத்தை தற்போது ‘சிவப்பு’ எச்சரிக்கை வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆரம்பித்த தீ, இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாக தொடர்கிறது. கிட்டத்தட்ட 1000 வரையான தீயணைப்பு படையினர் இரவு பகலாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் தீ இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்து வீதிகளிலும் பகல் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள், மகிழுந்துகள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட எந்த வாகனத்தும் அனுமதி அளிக்கப்படவில்லை. அத்துடன் நடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளைஇ, நீச்சல் தடாகங்கள் மற்றும் கடற்கரை தவிர்ந்த ஏனைய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கும், கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.