பிரான்ஸின் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் பலமான கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளன.நீண்ட காலமாகக் கொள்கை வேறுபாடுகளால் பிளவுபட்டிருந்த சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியன மூத்த தீவிர இடதுசாரி ஜோன் லூக் மெலன்சோன் தலைமையில் ஒன்றுபட்டு பொதுவான ஒர் அணியாகத் தேர்தலை எதிர்கொள்வதற்கு இணங்கியுள்ளன.

கூட்டணி உடன்படிக்கைக்கான பேச்சுக்கள் நடைபெற்றுவருகின்றன.நாட்டின் பாரம்பரியக் கட்சிகளில் ஒன்றாகிய சோசலிஸக் கட்சி (Parti socialiste) தேசிய அரசியலிலிருந்து ஒதுக்கப்படும் அளவுக்கு வங்குரோத்தான கட்டத்தை அடைந்துள்ளது.

அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ 1.75 சதவீதவாக்குகளுடன் படுதோல்வி அடைய நேரிட்டது. தேசிய அரசியலில் செல்வாக்கிழந்துவிட்ட அக் கட்சி நீண்ட காலமாக அதன் அரசியல் எதிரியாக விளங்கிய தீவிர இடதுசாரி மெலன்சோனுடன் கூட்டணி அமைக்க இணங்கியிருப்பதற்கு பிரான்ஷுவா ஹொலன்ட் போன்ற அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அதிபர் தேர்தலில் மக்ரோன் வெற்றிபெற்றுள்ளபோதிலும் அவரது அரசியல் திட்டங்களை நிறைவேற விடாது தடுப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு வாக்குகளைச் செலுத்தித் தன்னைப் பிரதமர் பதவியில் அமர்த்துமாறு

மெலன்சோன் வாக்காளர்களைக் கேட்டிருக்கிறார். அவர் ஏப்ரலில் நடந்த அதிபர் தேர்தலில் மக்ரோன் மற்றும் மரின் லூ பென்னுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறித் தேசிய அரசியலில் தன்னை ஓர் வலுவான பெரும் சக்தியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.அவர் அமைக்கவுள்ள இடது சாரிகள் கூட்டணி கணிசமான நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.