காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் ஒரு பகுதியை அவர்களது மோப்பநாய் உண்டதால், கடத்தல்காரன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Toulouse (Haute-Garonne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மார்ச் 17 ஆம் திகதி அன்று மோப்ப நாயின் உதவியுடன் போதைப்பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் 25.5 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியிருந்தனர். அதன் உரிமையாளரை தேடிவந்த நிலையில், சில நாட்களின் பின்னர் மார்ச் 28 ஆம் திகதி அன்று அப்போதைப்பொருட்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சில நாட்கள் முன்பு - 29 வயதுடைய குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது கைதான நபர் தெரிவித்த தகவலும், போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் வழங்கிய தகவல்களும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்துள்ளது. இதனால் வழக்கை இரத்துச் செய்து- குறித்த நபரை நீதிமன்றம் விடுவித்தது.
பின்னர் விசாரணைகளில் - காவல்துறையினரின் மோப்ப நாய் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சிறிய அளவை உட்கொண்டிருந்தமையும் - போதைப்பொருட்களின் அளவில் வேறுபாடு இருந்ததால் நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், உள்ளூர் அரச வழக்கறிஞர்கள் இச்சம்பவம் தொடர்பில் மேல்முறையீடு செய்துள்ளனர்.