இரஷ்யா-உக்ரைன்’ விவகாரத்தில் மக்ரோன் தலையிடுவது குறித்து போலந்து பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதையடுத்து ஜனாதிபதி மக்ரோன் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

“இம்மானுவல் மக்ரோன் தொடந்து விளாடிமிர் புட்டினுக்கு (இரஷ்ய ஜனாதிபதி) அழைப்பெடுக்கிறார். எத்தனை தடவைகள் நீங்கள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்கள்.?? இதனால் நீங்கள் என்ன சாதித்துள்ளீர்கள்?” என போலந்து பிரதமர் Mateusz Morawiecki தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த விமர்சனத்துக்கு ஜனாதிபதி மக்ரோன் உடனடியாக பதிலளித்துள்ளார். Le Parisien ஊடகம் மூலமாக அவர் பதிலளிக்கையில், “அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது எனது கடமையாகும். எங்களுக்கு அது தேவையாக உள்ளது. பேச்சுவார்த்தையை நான் நிறுத்தப்போவதில்லை.” என தெரிவித்தார்.

மேலும், “விளாடிமிர் புட்டினுடனும் Zelensky உடனும் (உக்ரைன் ஜனாதிபதி) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் என்றோ ஒரு நாள் யுத்த நிறுத்த கொண்டுவர முடியுமானால் - அமைதியை கொண்டுவரமுடியுமானால் அதுவே எமக்கு தேவை. நடுநிலைவாதி ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். இரஷ்ய உக்ரைன் விவகாரத்தில் நானே அந்த நடுநிலைவாதி!” என மக்ரோன் மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிலளித்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் இத்துடன் நிறைவடையவில்லை.

போலந்து பிரதமர் Mateusz Morawiecki இனை யூத மதத்துக்கு எதிரானவர் எனவும், பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் Marine Le Penக்கு அவரது ஆதரவை தெரிவிக்கலாம் எனவும் மக்ரோன் விமர்சித்துள்ளார்.

இதனால் விவகாரம் இன்னும் மோசமடைந்துள்ளது.

போலந்து தரப்பில் மக்ரோனின் இந்த வார்த்தைப் பிரயோகங்களுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. போலந்து அரச ஊடகப்பேச்சாளர் Piotr Müller தெரிவிக்கையில், ‘மக்ரோன் தனது வார்த்தைகளை தேர்தெடுப்பதில் மிகவும் பின் தங்கியுள்ளார்’ என தெரிவித்தார்.

அதேவேளை, போலந்தில் உள்ள பிரெஞ்சு தூதரகம் ஊடாக அந்நாட்டு அரசு ஜனாதிபதி மக்ரோனுக்கு தமது கண்டனத்தையும் அனுப்பி வைத்துள்ளது.

மேற்படி சம்பவங்களினால் பிரெஞ்சு-போலந்து நாடுகளுக்கிடையே ராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது.