இரஷ்யா விதித்த புதிய நிபந்தனை ஒன்றினால் பிரான்சுக்கு எரிவாயு கிடைப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இரஷ்யாவில் இருந்து எரிவாயு வாங்கும் போது இஷ்யாவின் ரூபிள் (Rubles) பணம் மூலமாகவே வாங்க முடியும் என இன்று வியாழக்கிழமை இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். இதுவரை டொலர்ஸ் அல்லது யூரோக்களை கொடுத்து வாங்கக்கூடியதாக இருந்த நிலையில், இரஷ்யாவின் இந்த அறிவிப்பு பிரான்சுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடைமுறை நாளையில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும், முந்தைய ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும் விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வருவதால், பிரித்தானியா, கனடா, தாய்வான், வடகொரியா, நோர்வே, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் பிரான்சும் பாதிப்புக்குள்ளாகிறது.
அதேவேளை இந்த அறிவிப்புக்கு பிரான்ஸ் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘பிரான்ஸ் ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுள்ளது. பிரான்ஸ் யூரோ அல்லது டொலர்சில் பணம் செலுத்தும். ஒப்பந்தம் போடப்பட்டது உறுதியானது!’ என பிரெஞ்சு பொருளாதார அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார்.
ஆனால் இந்த அறிவிப்புக்கு இரஷ்ய தரப்பில் எந்த பதிலும் இல்லை. அடுத்து வரும் நாட்களில் இவ்விடயம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அறிய முடிகிறது.