93 வது மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களின் மூலகாரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN அதிகாரிகள் குறித்த காவல்துறை அதிகாரியை கைது செய்துள்ளனர். Aulnay-sous-Bois நகர காவல்நிலையத்தில் பணியாற்றும் குறித்த அதிகாரி, நேற்று புதன்கிழமை பகல் 2 மணி அளவில் அதே நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

**
கடந்த சனிக்கிழமை குறித்த காவல்துறை அதிகாரியின் துப்பக்கிச்சூட்டுக்கு இலக்காகி 33 வயதுடைய சாரதி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். Sevran நகரில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. திருடப்பட்ட மகிழுந்து ஒன்றில் பயணித்த குறித்த சாரதியை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர் மகிழுந்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணிக்க, அதிகாரிகள் அவரை துரத்திச் சென்றுள்ளனர்.

அதன்முடிவில், குறித்த காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தி சாரதியை கைது செய்ய முற்பட்டார். ஆனால் இத்துப்பாக்கிச்சூட்டில் சாரதி கொல்லப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தை அடுத்து 93 ஆம் மாவட்டத்தின் பல நகரங்களில் இரவு நேர வன்முறை இடம்பெற்றது. குப்பைத் தொட்டிகளை தீ வைத்து எரித்தும், பேருந்து (609 ஆம் இலக்க) ஒன்றை தீ வைத்து எரித்தும் வன்முறை இடம்பெற்றிருந்தது.

இச்சம்பவங்களின் தொடர்ச்சியாகவே காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.