பேருந்து ஒன்றுடன் மகிழுந்து மோதிய கோர விபத்தில் ஒரு வயதுடைய குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் Val-d'Oise மாவட்டத்தில் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த மாவட்டத்தை ஊடறுக்கும் D 915 நெடுஞ்சாலையில் - தனது ஒரு வயது பிள்ளை மற்றும் தம்பி ஒருவருடன் பெண் ஒருவர் மகிழுந்தில் பயணித்துள்ளார். மகிழுந்தை செலுத்திய குறித்த பெண், முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். அப்போது, எதிர் திசையில் வந்த பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மகிழுந்தில் பயணித்த ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளது. அக்குழந்தையின் தயாரான மகிழுந்து சாரதியும், அவருடன் பயணித்த அவரின் தம்பியும் படுகாயமடைந்துள்ளனர்.

தீயணைப்பு படையினர், SAMU மருத்துவக்குழுவினர் சம்பவத்தில் தலையிட்டு, முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை Val-d'Oise மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறனர்.