பரிசின் புறநகர் பகுதியான Nemours (Seine-et-Marne) இல் உள்ள வீடொன்றில் இருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இங்குள்ள சிறிய வீடொன்றில் 56 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 17 வயதுடைய மகளும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்துள்ளனர்.
இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொல்லப்பட்ட தாயின் இரண்டாவது மகள் (வயது 15) வீடு திரும்பிய போது இச்சம்பவத்தை கண்டதாகவும், அவரே காவல்துறையினரை அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடயங்களை சேகரித்து வரும் காவல்துறையினர், வீட்டின் கதவோ ஜன்னலோ உடைத்த அடையாளங்கள் எதுவும் இல்லை எனவும், அதேவேளை ‘தாயும்-மகளும்’ ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவில்லை எனவும், குறித்த இரு பெண் பிள்ளைகளின் தாயிற்கு எந்த குற்றப்பின்னணியும் இல்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
விசாரணைகள் தொடர்கிறது.