பிரான்ஸில் ரிசேர்வ் படைப்பிரிவினரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது. அதற்காக ஆட்களைச் சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது.17 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்ட -நல்ல தேகாரோக்கியம் கொண்ட --குற்றப் பின்னணி எதுவும் அற்ற - - பிரெஞ்சுக் குடிமக்கள் இணைந்துகொள்ளலாம்.

பிரான்ஸின் அரசுத் தலைமை பூகோள அரசியல் நிலவரத்தில் ஏற்பட்டுவருகின்ற மாற்றத்தை அடுத்து நாட்டின் பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்துகின்ற முயற்சிகளில் இறங்கியுள்ளது.



புதிய முதலீடுகள், ரிசேர்வ் படையை விரிவுபடுத்தல், கட்டாய இராணுவ சேவை எனப் பல்வேறு விடயங்கள் விவாதங்களில் பேசப்பட்டுவருகின்றன.

பிரான்ஸில் தற்சமயம் பொலீஸ், ஜொந்தாம் மற்றும் முப்படைகளின் செயற்பாட்டு ரிசேர்வ் பிரிவுகளில்(operational reserve) நாற்பதாயிரம் வீரர்கள் உள்ளனர். அதனை 80 ஆயிரமாக அதிகரிக்க அரசு விரும்புகிறது.

ரிசேர்வ் படைவீரர் ஒருவர் இராணுவத்தைப் போன்றே சீருடை அணிவார். இராணுவப் பயிற்சிகள் அனைத்தையும் பெற்றிருப்பார். ஆனால் சாதாரண வாழ்வை வாழும் அவர்கள் மருத்துவராகவோ பொறியியலாளராகவோ வேறு தொழில் தொழில்துறைகளில் ஈடுபடுபவர்களாக இருப்பர்.

ஓராண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை புதுப்பிக்கப்படத்தக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கும் இவர்களுக்கு அவர்களது தர நிலைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். வருடத்தில் குறைந்தது 60 நாட்கள் இராணுவப் பணிகளில் ஈடுபட வேண்டும். நாட்டின் எல்லைக்குள்ளேயும் வெளியேயும் நிலைமையைப் பொறுத்துப் பணிகள் விரிவடையலாம்.

பிரான்ஸில் வங்கிகளில் உள்ள குடிமக்களது சேமிப்பு நிதியைப் பாதுகாப்புத் துறைகளில் முதலீடு செய்வதற்காக அரசு கையகப்படுத்துமா?

-அண்மையில் அரசுத் தலைவர் மக்ரோன் நாட்டுக்கு ஆற்றிய உரையைத் தொடர்ந்து இந்தக் கேள்வி செய்தி ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

பிரெஞ்சு மக்கள் தங்களது Livret A எனப்படுகின்ற தனிப்பட்ட சேமிப்புக் கணக்கில் வைப்பிட்டுள்ள மொத்தத் தொகை - 2023 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 403.9 பில்லியன் ஈரோக்கள் ஆகும். இந்த நிதியை அரசு போர்ப் பொருளாதாரத்துக்காக எடுத்துக்கொள்ளப் போகிறது என்றவாறு பரவுகின்ற தகவல்கள் பொதுமக்களிடையே பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயினும் இவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என்று நிதி அமைச்சு வட்டாரங்கள் மறுத்துள்ளன.

உக்ரைனில் நீடித்து வருகின்ற போர், ஐரோப்பாவின் இராணுவ நட்பு நாடு என்ற நிலையில் இருந்து அமெரிக்காவின் விலகல் ஆகிய அச்சுறுத்தல்களை அடுத்து பிரான்ஸின் பாதுகாப்புச் செலவீனங்களை இரண்டு முதல் மூன்று மடங்குகளாக அதிகரிப்பதற்கு அதிபர் மக்ரோன் விரும்புகிறார். அரசு நிதிக் கருவூலம் காலியாக உள்ள நிலையில் பாதுகாப்புக்கான நிதியை எங்கிருந்து அது திரட்டப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.