பாதுகாப்பு சம்பந்தமான தொழில் துறைகளில் பொதுமக்கள் தன்னார்வ அடிப்படையில் நிதி முதலீடு செய்ய வசதியாக விசேட சேமிப்புக் கணக்கு ஒன்றை அரசு ஆரம்பிக்கவுள்ளது. தேசபக்திச் சேமிப்பு (patriotic savings) என்ற அர்த்தத்துடன் இது அழைக்கப்படும்.
பிரான்ஸின் நிதி அமைச்சர் எரிக் லொம்பா (Eric Lombard) இத்தகவலை அறிவித்திருக்கிறார்.
நாட்டின் பொது முதலீட்டு வங்கியாகிய Bpifrance வங்கி, முதற்கட்டமாக சுமார் 450 மில்லியன் யூரோக்கள் முதலீட்டு நிதியைச் சேகரிப்பதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கிறது. பிரெஞ்சு மக்கள் தங்கள் பணத்தை அதில் முதலீடு செய்யலாம் - என்ற விவரத்தை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
பொது முதலீட்டு வங்கி (Bpifrance) என்பது நாட்டின் தொழில் துறை நிறுவனங்களுக்கு அவற்றின் வளர்ச்சிக் கட்டங்களுக்கு ஏற்ப நிதி முதலீட்டு உதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசாங்க வங்கி ஆகும். பாதுகாப்புடன் தொடர்புடைய கம்பனிகளுக்கு முதலீடுகளை அதிகரிக்க வசதியாகவே குடிமக்களின் பங்களிப்புடனான இந்தச் சேமிப்புத் திட்டத்தை அந்த வங்கி ஆரம்பிக்கின்றது.
ஒருவர் ஆகக் குறைந்தது 500 யூரோக்களை இந்தக் கணக்கில் முதலிட முடியும். அடுத்த ஐந்து ஆண்டுகாலப்பகுதிவரை அதனை மீளப் பெற முடியாது.
ஆயுத உற்பத்தி உட்பட பாதுகாப்பு சம்பந்தமான நூற்றுக்கணக்கான
தொழில் நிறுவனங்களில் இந்த நிதி முதலீடு செய்யப்படும். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதனை மீளப் பெறமுடியும். ஆனால் ஏனைய சேமிப்புக் கணக்குகளைப் போன்று வட்டி வீதத்துடன் அது மீளளிக்கப்படுமா என்பது தொடர்பாக உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை.
குடிமக்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்காகத் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து விரும்பிச் செய்கின்ற இந்த நிதி முதலீடு செய்யப்படுகின்ற நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பெறுபேறுகளின் அடிப்படையில் பெரும் தொகையாக மீளளிக்கப்படவும் வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் எமானுவல் மக்ரோன் பூகோள அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற சடுதியான மாற்றத்தை அடுத்துத் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளார். நாட்டின் ஆயுதத் தொழிற்சாலைகளில் போராயுத உற்பத்திகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
இனிவரும் காலங்களில் ஆண்டு தோறும் நூறு பில்லியன் யூரோக்களைப் பாதுகாப்புக்காகச் செலவிட அரசு தீர்மானித்துள்ளது.
ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்களின் தன்னார்வ அடிப்படையிலான பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அதிபர் மக்ரோன் அண்மையில் தனது முக்கிய உரை ஒன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.