ஆயுத மோதல்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டால் அவற்றுக்கு முகம்கொடுத்துத் தப்பி வாழ்வது எப்படி? ஆயத்தமாக இருப்பது எவ்வாறு?

-இதனை விளக்கும் கையேடு ஒன்று விரைவில்-இந்தக் கோடைப் பருவத்தின்போது- சகல பிரெஞ்சு மக்களினதும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.




சுமார் இருபது பக்கங்கள் கொண்ட இந்தக் கையேடு பிரெஞ்சு மண்ணில் இவ்வாறான ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கி இருக்கும். மூன்று பிரிவுகளைக் கொண்ட அதில் தங்களைத் தாங்களே பாதுகாப்பது, குடும்பத்தவர்களையும் அயலவர்களையும் பாதுகாத்தல், அதேசமயம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுடனும் ஐக்கியப்பட்டுத் தகவல்களைப் பரிமாறுதல், விழிப்புணர்வூட்டுதல் என்பன தொடர்பில் நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

பிரான்ஸின் செய்தி ஊடகம் ஒன்றுக்கு இதுதொடர்பான தகவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள், "நாட்டுக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்படும்பட்சத்தில் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகளை இந்தக் கையேடு உள்ளடக்கியிருக்கும்" என்று தெரிவித்துள்ளன.

போருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு நெருக்கடிக்கும் முகம்கொடுப்பதற்குப் பிரெஞ்சுக் குடிமக்களைத் தாயார்ப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோன்ற ஐந்து மில்லியன் கையேடுகளை கடந்த நவம்பரில் சுவீடன் தனது குடிமக்களுக்கு விநியோகித்தது. சுவிற்ஸர்லாந்தும் மேலும் சில பால்டிக் நாடுகளும் ஸ்கன்டிநேவிய நாடுகளும் இதேவிதமாகத் தத்தமது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்து வருகின்றன.

உக்ரைன் மீதான போரை ரஷ்யா ஐரோப்பாவின் ஏனைய நாடுகளது எல்லைகளை நோக்கி மேலும் விரிவுபடுத்தலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கைகளை அடுத்தே நாடுகள் தத்தமது மக்களை இவ்வாறு விழிப்பூட்ட விரும்புகின்றன என்று கூறப்படுகிறது. அமெரிக்க அரசின் கொள்கை மாற்றங்களை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கூட்டாகத் தங்களைப் பலப்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்திவருகின்றன.

அதிபர் மக்ரோன் அண்மையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரை ஒன்றில், ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நாட்டு மக்களின் பங்களிப்பைக் கோரியிருந்தார்.