ஐரோப்பாவில் முதலாவது பரசிற்றமோல்(Paracetamol) மருந்துத் தொழிற்சாலை பிரான்ஸில் அடுத்த 
ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

தென்பகுதி நகரமாகிய துளுஸில் 
(Toulouse) புற்றுநோய் ஆராய்ச்சி வளாகம் அமைந்துள்ள ஒங்கோபோல் (oncopole) நிலையத்தில் இந்தத் தொழிற்சாலை அமையவுள்ளது. பரசிற்றமோல் வகை மருந்துகளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் இங்கே உற்பத்தி செய்யப்படும். 

ஐரோப்பாவில் இயங்கிவந்த பரசிற்றமோல் தொழிற்சாலைகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களது போட்டா போட்டி  
காரணமாக 2009 ஆம் ஆண்டில் மூடப்பட்டன. 

பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில்
பரசிற்றமோல் வகை மருந்துகளுக்கு அடிக்கடித் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. முழுவதும் வெளிநாட்டு இறக்குமதிகளில் தங்கியிருப்பதே இதற்குக் காரணமாகும். அமெரிக்கா, சீனா, இந்தியாவில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களே ஐரோப்பாவின் பரசிற்றமோல் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன. கொரோனாப் பெருந் தொற்று நோய்க் காலத்திலும் அதன் பிறகும் இந்த நாடுகளில் மருந்து மூலப் பொருள் உற்பத்தி தடைப்பட்டதன்  
காரணமாக பிரான்ஸில் மட்டுமன்றி ஐரோப்பா எங்கும் சாதாரண பரசிற்றமோல் முதல் 
முக்கிய மருந்துக் குளிகைகளுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. 
மருந்து வகைகளுக்கு வெளிநாட்டு இறக்குமதியில் தங்கியிருந்ததன் விளைவை நாடுகள் எதிர்கொண்டன. அரசுகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டது.