தென்பசுபிக் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிற பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் இடைநடுவில் சிறிலங்காவுக்கும் செல்கிறார் என்று எலிஸே மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.



இந்து சமுத்திரத் தீவாகிய சிறிலங்காவில் பிரெஞ்சு அதிபர் ஒருவர் கால்பதிப்பது இதுவே முதல் முறை என்று பாரிஸ் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இருதரப்பு உறவுகளை ஆழமாக்குவதற்கும், இரு நாடுகளின் பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை விவாதிக்கவும் இந்த விஜயம் ஒரு வாய்ப்பாக அமையும் "-என்று எலிஸே வட்டாரங்கள் கூறியுள்ளன.



நியூ கலிடோனியா, (New Caledonia) வானுவாட்டு(Vanuatu) பப்புவா நியூகினியா(Papua New Guinea) ஆகிய பசுபிக் தீவுகளுக்குச் சென்றிருந்த

அதிபர் மக்ரோன் பப்புவா நியூகினியாவில் இருந்து பாரிஸ் திரும்புகின்ற வழியில் கொழும்பில்

தரித்து நிற்கும் சமயத்தில் அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.



பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய கலிடோனியாவில் சில தினங்கள் தங்கியிருந்த அவர்  வியாழக்கிழமை வானுவாட்டு சென்றார். பின்னர் பப்புவா நியூகினியா செல்லவுள்ள அவர், அங்கிருந்து திரும்பும் வழியில் பெரும்பாலும் வெள்ளிக் கிழமை கொழும்பைச்

சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது