பாரிஸ் RER B ரயில் மார்க்கத்தில் உள்ள "Cité universitaire"ரயில் நிலையத்தில் இன்று காலை பெண் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ரயில் மேடையில் இருந்து தள்ளப்பட்டதில் தண்டவாளப் பகுதிக்குள் வீழ்ந்துள்ளார். அங்கிருந்து ஒருவாறு எழுந்து வெளியேறிவர முயன்ற சமயம்

விரைந்து வந்த ரயிலில் நசியுண்டார் என்று கூறப்படுகிறது.



வலோத்காரமாக அந்தப் பெண்ணைத் தள்ளித் தடத்தில் வீழ்த்தியவர் எனக் கூறப்படுகின்ற நபர் ஒருவர் ரயில் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார் என்றும் பின்னர் பாரிஸ் புறநகரன விற்றி-சூ-சீனில்(Vitry-sur-Seine- Val-de-Marne) வைத்துப் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டார் எனவும் அறிவிக்கப்படுகிறது.



காலை நேரம் நிகழ்ந்த இந்த அனர்த்தம் காரணமாக ரயில் சேவைகள் சில மணி நேரம் தடைப்பட்டன. பெண்ணை மோதிய ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மீட்பு நடவடிக்கைகளுக்காக ரயில் நிலையம் மூடப்பட்டது.