பிரதமர் எலிசபெத் போர்னுக்கும் முக்கிய எட்டுத் தொழிற்சங்கங்களது

பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று புதன்கிழமை பிரதமர் மாளிகையில் இடம்பெற்ற பேச்சுக்கள் முன்னகர்வு ஏதுமின்றித் தோல்வியில் முடிந்தன.



ஓய்வூதிய வயதை 62 இல் இருந்து 64 ஆக அதிகரிப்பதை அரசு கைவிட வேண்டும் என்ற மாற்றமுடியாத- விடாப்பிடியான- நிலைப்பாட்டோடு தொழிற்சங்கங்களும், ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தில் எந்த ஒரு பின்னகர்வுக்கும் இடமே இல்லை

என்ற உறுதிப்பாட்டுடன் அரசுத் தரப்பும்

பேச்சு மேசையில் அமர்ந்ததால் எதிர்பார்க்கப்பட்டது போலவே அது

தோல்வியில் முடிவடைந்தது. பேச்சு ஆரம்பித்த கையோடு உடனடியாகவே

இரண்டு தரப்பினரிடையேயும் வாய்த் தர்க்கங்களும் கடும் வார்த்தைப் பிரயோகங்களும் பலமாக வெடித்தன என்று கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே பேச்சு முறிந்தது. தொழிற்சங்கப் பிரமுகர்கள் பிரதமர் மாளிகையை விட்டு உடனடியாகவே வெளியேறினர்.

ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாகப் பேசுவதற்கு பிரதமர் இணங்காவிட்டால் அந்தப்

பேச்சு ஒரு தோல்வியாகவே இருக்கும் என்று பிரதமருடன் பேச்சுக்குச் செல்வதற்கு முன்னராகவே தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன.



இன்றைய பேச்சுக்களில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதைத் திரும்பப் பெறுவது தொடர்பாகப் பேசுவதற்குப் பிரதமர் ஒரு வழியைக் கூடத் தங்களுக்குத் திறக்கவில்லை என்றும் அதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது-என்றும் எட்டுத் தொழிற் சங்கங்களினதும் சார்பில் பேசிய பிரதிநிதி ஒருவர் குற்றஞ்சாட்டினார் .



மக்ரோன் அரசின் ஓய்வூதியச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்படாமல் அரசமைப்புச் சட்டத்தின் விசேட அதிகாரத்தின் கீழ் நேரடியாகவே நிறைவேற்றப்பட்ட பின்னர்-



அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து

நாடெங்கும் தொழிலாளர்களது போராட்டங்கள் தீவிரமடைந்து

முழு நாடுமே கொந்தளித்துப் போயிருக்கின்ற சூழ்நிலையில் -



முக்கிய தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையே முதன் முறையாக நடந்த சந்திப்பு இதுவாகும்.

இன்றைய பேச்சுக்கள் தோல்வி கண்டதை அடுத்து நிலைவரம் மேலும்

மோசமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன."64 வயது அதிகரிப்பு

வேண்டாம்"என்பதை ஒட்டு மொத்தத் தொழிலாளர்களதும் ஒருமித்த குரலில்

வெளிப்படுத்துவதற்காக நாளை வியாழக்கிழமை நடைபெறுகின்ற 11 ஆவது கட்ட வீதிப் பேரணிகளில் முழுப் பலத்துடன் அணி திரண்டு பங்கேற்குமாறு தொழிற் சங்கங்கள் இன்று அழைப்பு விடுத்துள்ளன.
அதிபர் எமானுவல் மக்ரோன் சீனாவில்

பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த

நிலையில் அரசு - தொழிற்சங்கங்கள்

இடையிலான இன்றைய பேச்சுத் தோல்வி கண்டிருக்கிறது. இதனால் நாடு பெரும் "ஜனநாயக நெருக்கடியைச்" சந்தித்துள்ளது என்றவாறு எதிர்க் கட்சிகள் குமுறத் தொடங்கியுள்ளன.



ஓய்வூதியச் சீர்திருத்தத்தால் ஏற்பட்டுள்ள நிலைமையை நாட்டின் "ஜனநாயக நெருக்கடி"("a democratic crisis") என்று குறிப்பிட்டு அழைக்க முடியாது என அரசாங்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.



"வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் உள்ளன. அவற்றை நாம் கண்டபடி பாவித்தால் விளைவுகள் மிகத் தீவிரமானதாக மாறலாம். நாட்டில் ஒரு ஐனநாயக வழிமுறை இருந்தது. 64 வயது அதிகரிப்பை விரும்பியிருக்கா விட்டால் அத்தகையோர் அதிபர் தேர்தலின் முதலாவது சுற்றில் மக்ரோனுக்கு வாக்களிக்காமல் விடுவதற்குச் சந்தர்ப்பம் இருந்தது. மக்ரோனை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை"



-இவ்வாறு அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கருதுகின்றன என்று பாரிஸ் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



இதேவேளை, நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பேரணிகளில் வன்செயல்களைத் தடுப்பதற்காகப் 11ஆயிரத்து 500 பொலீஸ் மற்றும் ஜொந்தாம் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.