ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்த்துத் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தங்கள் இந்த வாரம் செவ்வாய், சனி ஆகிய இருதினங்கள் நடைபெறவுள்ளன.நாளை செவ்வாய்க்கிழமையும் பின்னர் சனிக்கிழமையும் நாடெங்கும் பேரணிகளில் திரளுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துகள், கல்வி, எரிபொருள் விநியோகம், விமான சேவை உட்படப் பல்வேறு தொழிற்றுறையினர்களைப்
பிரதிநிதித்துவம் செய்கின்ற முக்கிய
எட்டுத் தொழிற்சங்கங்கள் இணைந்து
மூன்றாவது கட்டமாக இந்தப் போராட்டங்களை நடத்தவுள்ளன.
கடந்த இரு தடவைகள் விட இந்த வாரம் பாரிஸ் பிராந்தியப் (Ile-de-France) பொதுப் போக்குவரத்து சேவைகள்மேலும் பெருமளவில் ஸ்தம்பித நிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. SNCF போக்குவரத்து நிறுவனத்தின் அதி வேக ரயில்கள் கடந்த தடவைகளை விட நாளைய தினம் ஐந்தில் ஒன்று என்ற அடிப்படையில் குறைக்கப்படவுள்ளன. மெற்றோ, RER
ரயில்களும் பெரும் சேவைக் குறைப்புச் செய்யப்படவுள்ளன.
அதேசமயம்-
SNCF,RATPதொழிற்சங்கங்கள் வரும் சனிக்கிழமை வேலை நிறுத்தத்தைத்தவிர்த்து விட்டுப் பேரணிகளில் மாத்திரம் பங்குபற்றுமாறு தங்களது
பணியாளர்களைக் கேட்டிருக்கின்றன. எனவே சனியன்று பொதுப் போக்குவரத்துகள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை
என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்ட நகல் மீது சூடான விவாதங்கள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
தொழிற்சங்கப் போராட்டங்கள் ஒரு புறம் நடைபெற்றுவரும் நிலையில் எதிர்க்கட்சிகள் பெரும் அரசியல் போராட்டத்தை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கத்
தொடங்கியுள்ளன. பிரதமர் எலிசபெத் போர்ன் சமர்ப்பித்துள்ள இந்தச் சட்ட நகலுக்கு இன்றைய நிலையில் ஆக 185 நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு மட்டுமே உறுதியாகியுள்ளது எஎன்று செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆகக் குறைந்தது
287 உறுப்பினர்களது பெரும்பான்மை
அவசியமாகும். அதிபர் மக்ரோனது கட்சிக்குள் பலரும் மற்றும் அவருக்கு ஆதரவான கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் கூட ஓய்வூதியச் சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர்.