பிரான்ஸில் பாடசாலைகள் தத்தமது மாணவர்களுக்குத் தனித்தனியே சீருடைகளைக் கட்டாயமாக அறிமுகப்படுத்த வழிசெய்யும் சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. மரீன் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிக் கட்சியின்(Rassemblement national) சார்பில் எம்.பி ஒருவர் அந்தப் பிரேரணையை முன்வைத்திருந்தார். அதற்குச் சகல உறுப்பினர்களது ஆதரவையும் கோரியிருந்தார். பிரேரணை மீது நேற்று விவாதம் நடத்தப்பட்டது. முடிவில் கை உயர்த்தி
ஆதரவு தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அச்சமயம் பெரும்பான்மையான உறுப்பினர்களால் அது நிராகரிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இதற்கு முன்னரும் இது போன்று சீருடைப் பிரேரணைகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டிருந்தன.ஆனால் இந்தத் தடவை அது பரந்த அளவில் அரசியல் விவாதங்களுக்கு உட்பட்டிருந்தது.
ஏனைய பல நாடுகளைப் போன்று
பிரான்ஸில் அரசுப் பாடசாலை மாணவர்களுக்கெனச் சீருடை எதுவும் கிடையாது. 1968 ஆம் ஆண்டுக்கு முன்னர் பாடசாலைகளில் மாணவர்கள் சீருடை அணிவது கட்டாயமாகப் பின்பற்றப்பட்டுவந்தது. பின்னர் அது நீக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் தாம் விரும்பியதை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்ல முடியும்.
கண்டபடி விதம் விதமாக உடை உடுத்தி
வருவது வகுப்பறைகளில் மாணவர் மத்தியில் ஆடை அணிகள் தொடர்பான ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் உருவாக்குகிறது. இன-மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளைச் சிலர் அணிந்துவருவதற்கும் இது ஒரு காரணமாக உள்ளது என்று பரவலாகக் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சீருடைகள் மாணவர்கள் மத்தியில்
சமத்துவதைப் பேணுவதுடன் சமூக ஏற்றத்தாழ்வுகள், வசதி, அந்தஸ்து போன்ற அடையாளங்களை அழிப்பதற்கும் உதவுகின்றன என்று
அதை ஆதரிப்போர் கருதுகின்றனர்.
பிரான்ஸின் கல்வி அமைச்சர் பேஆபே என்டியாய் (Pap Ndiaye) மாணவருக்குச் சீருடையைக் கட்டாயமாக்குவதை ஆதரிக்கவில்லை. இந்த விவகாரத்தில் பாடசாலை நிர்வாகங்களும் பெற்றோர்களுமே இறுதி முடிவை எடுக்கவேண்டும் என்று மக்ரோன் அரசின் அமைச்சர் கப்ரியேல் அட்டால்
கூறியிருக்கிறார். அதேசமயம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு மாறாக அதிபர் மக்ரோனின்
துணைவியார் பிரிஜித் மக்ரோன்
பள்ளிச் சீருடையை ஆதரித்துக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
சுமார் 15 வருடங்கள் ஒரு மாணவியாக
சீருடை அணிந்துள்ளேன்."அது மிக
வசதியாக இருந்தது"என்று அவர்
பத்திரிகைச் செவ்வி ஒன்றில் கூறியிருக்கிறார். "சீருடை வேறுபாடுகளைக் களைகின்றது. அணிந்துகொள்வதற்கான நேரத்தைக்
குறைக்கிறது. வசதியான-விலையுயர்ந்த-ஆடைகளைத் தேடிவாங்கி அணிய வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் பெற்றோரது செலவு மிச்சமாகிறது நான் அதனை ஆதரிக்கிறேன்" - என்றும் பிரிஜித் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.
லத்தீன் மற்றும் இலக்கியத் துறை ஆசிரியையாக இருபது வருடங்கள் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் பிரிஜித் மக்ரோன். பாடசாலை முடிந்த பின்னர் நடத்தப்படுகின்ற அரங்குப் பயிற்சி
வகுப்பிலேயே அவர் தனது கணவர் மக்ரோனைச் சந்தித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.