இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகத்தில் (l'Université de la Sorbonne) இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வில் அதிபர் மக்ரோனும் சான்சிலர் சோல்ஸும் கலந்து கொள்கின்றனர். பின்னர் இருவரும் 

அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் 

ஒன்றாகக் கலந்துகொள்கின்றனர். 


சான்சிலர் சோல்ஸுக்கும் மக்ரோனுக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நெருக்கமான நட்புறவு கிடையாது எனினும் உக்ரைன் போர் உட்பட ஐரோப்பிய விவகாரங்கள் 

தனிப்பட்ட உறவை விட அதிக முக்கியத்துவம் பெறுகின்றன என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

இரு நாடுகளினதும் இந்த நட்புறவு ஒத்துழைப்பு ஏற்ற இறக்கங்கள் கொண்ட பல அத்தியாயங்களைக் கடந்து பயணிக்கின்றது. "பிரான்ஸ்- ஜேர்மனி நட்புறவு இல்லாமல் ஐரோப்பா இருக்க முடியாது" - என்றும் 

அவர்கள் குறிப்பிடுகின்றனர். 


ஐரோப்பாவின் ஒரு பகுதியில் பதினொரு மாதங்களாகப் போர் நீடிக்கின்ற நிலையில் பாதுகாப்பில் அதிக நிதி முதலீடு செய்வதன் மூலமும்

ஐரோப்பியத் தொழில் துறைப் போட்டித் தன்மையை வலுப்படுத்துகின்ற ஓர் மூலோபாயத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும் ஐரோப்பாவை மேலும் இறைமை உள்ளதாக மாற்றுவதை மக்ரோன்-சோல்ஸ் இடையிலான இன்றைய சந்திப்பு இலக்காகக் 

கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்

படுகிறது. 


🔵ஆயுதப்படைகள் 

நவீனமயமாகும் 


இதேவேளை, 


மரபு வழிப் போர் முறைமைகளில் மட்டும் தங்கியிருக்க முடியாது

என்பதை உக்ரைன் போர்க்களம் வல்லரசுகளுக்கு உணர்த்திவருகிறது.


சைபர் படைப் பிரிவுகள், ட்ரோன் எதிர்ப்புப் படை வல்லமை, மற்றும் விண்வெளிப்படைப்பிரிவு, செயற்கை நுண்ணறிவுத் துருப்புகளும் போர்ச் சாதனங்களும் என்று போர்களின் போக்கை மாற்றுகின்ற நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பத்திறனுக்கு அதிக நிதியைக் கொட்டிச் செலவழிக்க நாடுகள் தயாராகின்றன. 


பிரான்ஸ் 2024-2030 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது ஆயுதப்படைகளை மாற்றியமைத்து நவீனமயப்படுத்துவதற்காக ஆகக் கூடிய நிதியாக 413 மில்லியன் ஈரோக்களை ஒதுக்கியிருக்கிறது. 

அதிபர் மக்ரோன் நாட்டின் தென் பகுதியில் படைத் தளம் ஒன்றில் 

பாதுகாப்புப் படையினர் மத்தியில் 

புத்தாண்டு உரை நிகழ்த்தியபோது

இந்த நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்களை அறிவித்திருக்கிறார். 


"இந்த நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளப் பிரான்ஸ் அதன் படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும்." 


இந்த நிதி "எங்கள் சுதந்திரம், நமது பாதுகாப்பு, நமது செழிப்பு, உலகில் நமது இடம்" ஆகியவற்றை உறுதிப்படுத்த உதவும் என்று மக்ரோன் அங்கு கூறினார்.