தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் நெடுந்தூர தொடருந்து சேவைகளான TGV மற்றும் Intercités சேவைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

இன்று வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை காலை வரை போக்குவரத்து தடை ஏற்படும் என SNCF அறிவித்துள்ளது. TGV க்களில் 60% சதவீதமான சேவைகள் தடைப்பட்டுள்ளன.

குறிப்பாக அட்லாண்டிக் நோக்கிச் செல்லும் (Atlantic axis) தொடருந்துகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனவும், நான்கில் ஒரு சேவை மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் (Contrôleurs) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்தே இந்த போக்குவரத்து சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டு அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் சேவைகள் வரும் திங்கட்கிழமை வழமைக்குத் திரும்பும் என அறிய முடிகிறது. அதேவேளை, வரும் கிருஸ்மஸ் பண்டிகைக்காலத்தின் போது மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது