பிரான்ஸில் La baguette de pain எனப்படுகின்ற பிரபல பாண் வகையை யுனெஸ்கோ நிறுவனம் "மனித குலத்தின் பாரம்பரியமாக"(an intangible heritage of humanity) அங்கீகரித்திருக்கிறது. அதன் மூலம்
பிரான்ஸின் பாண் இனிமேல் உலக அளவில் அதன் அடையாளங்களில்
ஒன்றாக விளங்கப்போகிறது.
ஐ. நாவின் கல்வி, அறிவியல், பண்பாட்டு உப நிறுவனத்தின் (United Nations Educational, Scientific and Cultural Organization) அங்கீகாரம்
பக்கெற்றுக்குக் (La baguette) கிடைத்திருப்பதை
அதிபர் மக்ரோன் தனது ருவீற்றர் பதிவு ஒன்றில் வாழ்த்தி வரவேற்றிருக்கிறார். "எங்கள் அன்றாட வாழ்வில் 250 கிராம் கொண்ட அந்த மந்திரப் பொருள் தரும் பரிபூரணம் இப்போது பிரான்ஸின் அடையாளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. வெதுப்பகத் துறையினருடன் சேர்ந்து
பல காலம் நாங்கள் நடத்திய போராட்டத்துக்குப் பலன் கிடைத்துவிட்டது" - என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பொல்லு, அல்லது தடி, மந்திரக் கோல் என்று அர்த்தம் தருகின்ற "பக்கெற்" (La baguette) அவ்வாறு நீண்ட வடிவம் பெற்றமைக்கான காரணம் என்ன என்பதற்குப் போதிய சான்றுகள் கிடையாது. போர்க் காலங்களில் நெப்போலியனின் படைவீரர்கள் பாணை இலகுவாகச் சுமந்து செல்வதற்கு வசதியாகவே நீண்ட கோல் போன்ற வடிவத்தில் பாணைத் தயாரித்தனர் என்று ஒரு தகவல் சொல்கிறது.
வெதுப்பகங்களில் பாண் வாங்குவது
பிரான்ஸ் மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களில் தொடர்ந்துவருகின்ற முதன்மையான ஒரு பாரம்பரியமாக விளங்கிவருகிறது. ஆண்டு தோறும் சுமார் ஆறு பில்லியன் பாண் விற்பனையாவதாக மதிப்பிடப்படுகிறது.
தினசரி 12 மில்லியன் பிரெஞ்சு மக்களால் நுகரப்படுகின்ற பாணுக்கு
பாரம்பரிய உணவுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு கேட்டுக்
கடந்த பல ஆண்டுகளாக யுனெஸ்கோ விடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இப்போது அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ள போதிலும்
எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் பாண் தயாரிப்புத் துறையினர் பெரும் சவால்களை
எதிர்கொண்டுள்ளனர். மூலப் பொருள்களின் விலையேற்றம், எரிசக்திக் கட்டணங்களின் அதிகரிப்பு
போன்ற காரணங்களால் நாட்டில் வெதுப்பகங்கள் மூடப்பட்டு வருகின்றன.