உக்ரைனில் இருந்து பிரான்சுக்குள் நுழைந்துள்ள அகதிகளுக்கு தங்களது வீடுளில் வசிக்க அனுமதி வழங்கியுள்ளவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என பிரதமர் Elisabeth Borne அறிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுக்கு முன்னதாக இத்தகவலை பிரதமர் அறிவித்துள்ளார். “தாமாக முன்வந்து உக்ரைன் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து உதவி வழங்கியவர்களை நான் நினைத்து பார்க்கிறேன். நாம் அவர்களது உதவியில் பங்குகொள்ள எத்தனிக்கிறோம். வரும் நவம்பர் மாத இறுதியில் இருந்து அவர்களுக்கு நாம் உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளோம்!” என பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் உதவித்தொகை அளவு குறித்து உறுதிப்பட தகவல்களை வெளியிடவில்லை என்றபோதும், குடும்பம் ஒன்றுக்கு 100 இல் இருந்து 200 யூரோக்கள் வரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதுவரை உக்ரைனில் இருந்து பிரான்சுக்கு 100,000 அகதிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19,000 பேர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.