மகிழுந்து ஒன்றினால் பல மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை Vaulx-en-Velin (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 2.30 மணி அளவில் மூன்று காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது. அதன்போது ‘திருடப்பட்டதாக காவல்துறையினரால் குறிப்பிடப்பட்ட’ Peugeot 508 மகிழுந்து ஒன்று பயணிப்பதை பார்த்துவிட்டு அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
இருவர் பயணித்த குறித்த மகிழுந்து நின்றது. அவர்களை காவல்துறை அதிகாரி ஒருவர் நெருங்கி, சோதனையிட்டபோது, திடீரென மகிழுந்தினை இயக்கிய சாரதி அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார்.
அதனையடுத்து, அதிகாரி மகிழுந்துக்குள் ஏற முற்பட்டார். அப்போதும் மகிழுந்தை நிறுத்தாமல் தொடர்ந்து அதிகாரியை இழுத்துச் சென்றனர். சில மீற்றர் தூரம் அதிகாரி மகிழுந்தினால் இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மகிழுந்தை நிறுத்திவிட்டு அதிகாரியை கீழே தள்ளிவிட்டு மகிழுந்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர்.
கீழே விழுந்த அரிகாரி படுகாயமடைந்துள்ளார். அவர் சக அதிகாரிகளால் மீட்கப்பட்டு Lyon மாவட்டத்தின் 3 ஆம் வட்டாரத்தில் உள்ள Édouard-Herriot மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தப்பிச் சென்றவர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பயணித்த மகிழுந்து திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட மகிழுந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.