பிரான்சில் எரிசக்தியினை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக சில புதிய திட்டத்தினை இன்று வியாழக்கிழமை அரசு வெளியிட்டிருந்தது. Porte de Versailles கண்காட்சி கூடத்தில் வைத்து பிரதமர் மற்றும் சில அமைச்சர்கள் இணைந்து இந்த திட்டத்தினை வெளியிட்டனர்.

முதலில் பேசிய எரிசக்தி மாற்றத்துக்கான அமைச்சர் Agnès Pannier-Runacher சில தகவல்களை வெளியிட்டார். இக்குளிர் காலத்தின் போது நாம் 10% வீத எரிசக்தியினை சேமிக்க வேண்டும் என தெரிவித்த அவர் “எங்களுடைய கூட்டு முயற்சி எதிர்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலைக்குள் சிக்குவதில் இருந்து காப்பாற்றும்!” என தெரிவித்தார்.

அத்தோடு, வெப்பமூட்டியின் அளவை 19 °C வரை குறைப்பதற்கும், தண்ணீர் கொதிகலன்களின் அளவை 55 °C வரை மட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாத்திரம் துலக்கும் இயந்திரம், உலர வைக்கும் இயந்திரம் போன்ற இலத்திரனியல் பொருட்களை மட்டுப்படுத்தி பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


அதையடுத்து, பொதுபோக்குவரத்துக்களின் வேகத்தை மட்டுப்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது. 130 கி. மீ அதிகபட்ச வேகம் கொண்ட சாலைகளை 110 கி.மீ வேகமாக மட்டுப்படுத்தவும், தொடருந்து சேவைகளில் - வேகத்தை குறைக்காமல் எரிசக்தியை சிக்கனப்படுத்த சாரதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அத்தோடு, வீட்டில் இருந்து வேலை செய்வது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வோருக்கு ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உணவகங்கள், பொது கட்டிடங்கள், நீச்சல் தடாகங்கள் உளிட்ட இடங்களிலும் வெப்பமூட்டியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

விளம்பர பதாதைகளை அணைக்கவும், பகல் நேரத்தில் மின் விளக்குகளின் பயன்பாட்டை நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தனியார் வாகங்களில் அதிகபட்சமானோர் பயணிக்கவும், (மகிழுந்து ஒன்றில் நால்வர் பயணிப்பது) போன்ற திட்டங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தினமும் வேலைக்குச் செல்லும் நால்வர் ஒரு மகிழுந்தில் பயணித்தால் எரிபொருளின் தேவையை பாதியாக சிக்கனப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எரிசக்தியை சேமிப்பதற்காக பிரெஞ்சு அரசு 1 பில்லியன் யூரோக்கள் நிதியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் Elisabeth Borne அறிவித்தார்.