பிரான்ஸின் கடும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும் சமயத்தில் அரசு மற்றும் தனியார்த் துறை அலுவலகங்களில் பணியாளர் அறைகளது குளிர் கால வெப்பமூட்டும் அளவு 18 டிகிரியாக வரையறை செய்யப்படவுள்ளது. அதனால் ஊழியர்கள் கொரோனா தொற்றுக் காலம் போன்று வீடுகளில் இருந்து பணி புரிவதை ஊக்கப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அலுவலகங்களில்
குளிர் தாங்க முடியாதவர்கள் வீடுகளில் இருந்து தொழில் புரிய சந்தர்ப்பம் வழங்கப்படும். அதற்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவும் கிடைக்கும். அதேசமயம் அரசுப் பணிமனைகள் மற்றும் பொதுக் கட்டடங்களில் குளிக்கும் அறை தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு சுடுதண்ணீர் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.
எரிசக்தியைச் சிக்கனமாகவும் மிகுந்த நிதானத்துடன் பயன்படுத்துவதற்கான தேசிய அளவிலான திட்டத்தை பிரான்ஸின் அரசு தயார் செய்துள்ளது. எரிசக்தி மற்றும் பருவநிலை தொடர்பான நிபுணர்கள் நாற்பது பேரது ஆலோசனைகளுடன் வகுக்கப்பட்டிருக்கின்ற அத் திட்டத்தின்
விவரங்களைப் பிரதமர் எலிசபெத் போர்ன் வியாழக்கிழமை (ஒக. 6)நாட்டு மக்களுக்கு வெளியிடவுள்ளார்.
அந்தத் திட்டத்தில் அடங்கியுள்ள சில விடயங்களை செய்தி ஊடகங்கள் முன்கூட்டியே வெளியிட்டிருக்கின்றன.
அவற்றில் அரசு நிர்வாக அலுவலகங்கள் உட்பட பொதுக் கட்டடங்களில் வெப்பமூட்டப்படும் அளவுகள் வரையறை செய்யப்படுகின்ற தகவலும் அடங்கியுள்ளது. கடும் குளிர் காலத்தில் ஒருவர் சௌகரியமாக இருப்பதற்கு 20-22 டிகிரி அறை வெப்பநிலை அவசியம். ஆனால் எரிசக்திச் சேமிப்பை நோக்கமாகக் கொண்டு வெப்பமூட்டப்படும் அளவுகள் 18 டிகிரி வரை குறைக்கப்படுகின்றன. ஏனைய சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வெப்ப அளவு வரையறை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ளது. டென்மார்க்கில் பாடசாலை வகுப்பறைகளில் வெப்பம் 19 டிகிரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பா இந்த முறை கடுமையான குளிர் காலத்தை எதிர்கொண்டுள்ளது. கடும் குளிரின் போது வெப்பமூட்டும் செயற்பாடுகளுக்காக மின் பாவனை உச்ச அளவைத் தொடுவது வழக்கம்.
இந்த முறை ரஷ்யாவின் எரிவாயு இழப்புக் காரணமாக மின்சார நெருக்கடியை பல நாடுகள் எதிர்கொண்டுள்ளன. எனவே மின் வெட்டைத் தவிர்க்கும் நோக்குடன் சிக்கனத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
பிரான்ஸ் அரசின் திட்டத்தின் படி குடியிருப்புகளுக்குப் பொதுவாக மத்திய நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் வெப்பம் குறைக்கப்பட மாட்டாது. ஆனாலும் வீடுகளில் வெப்ப நிலையைப் பொது அறைகளில் 19 டிகிரியாகவும் படுக்கை அறையில் 18 டிகிரியாகவும் அதேபோன்று தண்ணீர் கொதி கலன்களின் வெப்பத்தை 55 டிகிரியாகவும் மட்டுப்படுத்திப் பயன்படுத்துமாறு மக்களிடம் அரசு கோரவுள்ளது. நாட்டின் எரிசக்தி நுகர்வைப் பத்து சத வீதம் குறைப்பதற்காகவே சிக்கனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. திட்டத்தின் முழு விவரங்களும் நாளை வியாழக்கிழமை வெளியாகும்.