பாரிஸ் புறநகரான லா கூர்னெவ்
(La Courneuve) பகுதியில் உடல் எங்கும் பலத்த வெட்டுக் காயங்களுடன் கார் ஒன்றில் காணப்பட்ட இரண்டு இளைஞர்களைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற இந்தப் பகுதியில் புதன் - வியாழன் 
நள்ளிரவு தாண்டிய வேளையில் 
இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரும் காயமடைந்தவரும் சிறிலங்கா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு கார்களில் வந்தவர்கள் என்று கூறப்படுகின்ற ஆறு பேர் கொண்ட குழுவினரே இளைஞர்கள் இருவரையும் வெட்டித் தாக்கியுள்ளனர் என்ற தகவலைப் பரிஷியன் செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது. 

வீதியில் ரோந்து சென்ற பொலீஸ் அணி ஒன்றே முதலில் Citroën C5 ரக கார் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்ததைக் கண்டுள்ளது.காரின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுக் கிடந்தன. உடனடியாக அம்புலன்ஸ் முதலுதவிப் பிரிவினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து 
இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு 
கொண்டு விரைந்தனர்.உடல் முழுவதும் சரமாரியான வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட 23 வயதான இளைஞர் வழியில் உயிரிழந்தார். மற்றவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

பாரிஸ் நீதித்துறைப் பொலீஸின் குற்றத்தடுப்புப் பிரிவினர் (criminal brigade of the Paris judicial police) இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல்களைத் திரட்டிவருகின்றனர்.தாக்குதலாளிகளையும் தாக்குதலுக்கான காரணத்தையும் அறிவதற்காக விசாரணைகள் தொடங்கப் பட்டுள்ளன.