பிரான்ஸின் அதிபர் மக்ரோன் உக்ரைன் யுத்தம், இந்தோ பசுபிக் பிராந்திய சவால்கள் என்பன குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வழியாகப்
பேச்சு நடத்தியுள்ளார். அதன் போது இலங்கை நிலைவரம் குறித்தும் உரையாடப்பட்டதாக எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களதும் பேச்சு நிரலில்
இலங்கை விடயம் இடம்பெற்றிருந்தது என்பதை ஏஎப்பி செய்தி ஒன்று உறுதிப்படுத்தியது.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்புக்கு மத்தியில் "யுவான் வாங் 5" (Yuan Wang 5) என்ற சீனாவின் உளவு மற்றும் ஆய்வுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நிலையில் இந்தோ-பசுபிக் மற்றும் இலங்கை நிலைமைகள் குறித்து மக்ரோன் மோடியுடன் விவாதித்துள்ளார் என்பதைப் பாரிஸ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இரு தலைவர்களினதும் நேற்றைய உரையாடலில் சீனக் கப்பல்
விவகாரம் குறித்து ஏதேனும் பிரஸ்தாபிக்கப்பட்டதா என்பது
தெரியவரவில்லை.
ரஷ்யா தொடுத்துள்ள போரினால் உக்ரைன் நாட்டின் ஸ்திரத்தன்மை குலைந்து அதன் பாதிப்புகள் உலகம் எங்கும் எதிரொலிப்பது குறித்தும் உணவு, தானிய நெருக்கடி பற்றியும் மக்ரோன் பிரதமர் மோடியுடன் பேசினார் என்றும், போரை நிறுத்தும் முயற்சிகளில் இந்தியாவும் பிரான்ஸும் கைகோர்த்துச் செயற்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டதாகவும் பாரிஸில் எலிஸே மாளிகை விடுத்த அறிக்கை
தெரிவித்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை வெளிப்படையாகக்
கண்டிப்பதைப் புதுடில்லி தவிர்த்து வருகிறது. ரஷ்யாவைக் கண்டிக்கின்ற ஐ. நா. தீர்மானங்களின் போதும் இந்தியா விலகியே இருந்துவருகிறது.
இதேவேளை, நேற்று உக்ரைன் அதிபர் ஷெலான்ஸ்கியுடனும்
மக்ரோன் தொலைபேசியில் பேச்சு நடத்தினார். அச்சமயம் அவர் ஸேபோறிஷியா அணு மின் ஆலைப் (Zaporizhzhia plant)பகுதியில் இருந்து ரஷ்யா தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.