பாரிஸ் நகரின் சில பகுதிகளில் இன்று மாலை ஆறு மணியளவில் 
திடீரெனப் பொழிந்த ஆலங்கட்டி மழைகாரணமாகப் பல தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின. நிலத்தடி 
மெற்றோ நிலையங்கள் சிலவற்றின் வாயில்கள் வழியே உள்ளே வெள்ளம் பாய்ந்ததால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். 
ஓரிரு ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பல மெற்றோ நிலையங்களில் ரயில்கள் தரிக்காமல் சென்றதால் பயணிகள் அந்தரப்பட நேர்ந்தது. தூர இடங்களுக்கான 
ரயில் போக்குவரத்துகளிலும் தாமதங்கள் ஏற்பட்டன. 
மெற்றோ வழித்தடம் 8 இல் (metro line 8) அமைந்துள்ள (Balard) நிலையத்தினுள் பெருமளவில் வெள்ள நீர் புகுந்ததால் (படம்) 
அது மூடப்பட்டது. Daumesnil, Pont de l'Alma, Pantin போன்ற நிலையங்களும் மூடப்பட்டவற்றில் அடங்கும். 



ஈபிள் கோபுரத்தில் அமைந்துள்ள 
அவதான நிலையத்தின் தரவுகளின் படி இன்று மாலை பெய்த மழையின் போது காற்றின் வேகம் மணிக்கு 104 km/h கிலோ மீற்றர்களாகப் பதிவானது. அதேசமயம் நகரில் சுமார் ஒருமணி நேரத்தில் 46 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 
பல இடங்களில் மிக மூர்க்கமான மழையுடன் ஆலங்கட்டிகளும்(chute de grêlons) பொழிந்து சேதங்களை ஏற்படுத்தின. எனினும் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் எந்தப் பகுதியிலும் இடம்பெறவில்லை என்று பாரிஸ் நகர தீயணைப்புச் சேவை தெரிவித்துள்ளது. 

பிரான்ஸில் கடந்த பல வாரங்களாக நீடித்த அனல் வெப்பத்தைத் தொடர்ந்து அதன் விளைவாகக் கடும்  இடிமின்னலுடன் புயல் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.