பிரான்சில் குடிதண்ணீர் போத்தல்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பிரான்சில் நிலவும் மிக கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக இந்த விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தோடு ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜூலை மாதத்தில் குடிதண்ணீர் போத்தல்களின் விற்பனை 19 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, இம்மாதத்தில் (ஓகஸ்ட்) மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிதண்ணீர் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஜூன் ஜூலை மாதங்களில் மிக சொற்பமான மழைவீழ்ச்சியே பதிவாகியிருந்தது.
அதையடுத்தே இந்த தண்ணீர் போத்தல்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
நுகர்வோர் பொருட்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் IRI எனும் நிறுவனமே இந்த தரவுகளை வெளியிட்டுள்ளது.