பிரான்ஸைக் கட்டம் காட்டமாகக் கடும் காண்டாவன வெப்ப அனல் தாக்கிவருகிறது. இதனால் பல இடங்களிலும் காடுகள் தீப்பற்றி எரிந்துகொண்டுள்ளன. அவற்றில் மிக மோசமானதும் கட்டுக்கடங்காததுமான பெரும் தீ

நாட்டின் தென்மேற்கே Gironde என்ற மாவட்டத்தில் பரவியுள்ளது. அங்கு

மிக மூர்க்கமான பெரும் தீயுடன் தாங்கள் போராடி வருகின்றனர் என்று தீயணைப்புப் படையினர் அறிவித்துள்ளனர். சுமார் ஆயிரம் வீரர்கள் பத்துக்கும் மேற்பட்ட ஹெலிகள், விமானங்கள் சகிதம் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் பெரும் ஆளணியினர் தேவைப்படுவதால் தொண்டர் அடிப்படையில் இயங்கும் தீயணைப்பு வீரர்களையும் களத்துக்கு அனுப்பிவைக்குமாறு

உள் துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா (Gérald Darmanin) தீயணைப்புப் படைப் பிரிவுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளார்.


பல இடங்களில் ஒரேசமயத்தில் தீ பரவியுள்ளதால் நாட்டின் தீயணைப்புத் துறை வளங்கள் நிலைமையைச் சமாளிக்க முடியாது திணறும் நிலை

ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஐரோப்பிய அயல்நாடுகளது உதவி

கோரப்பட்டுள்ளது. இத்தாலி, சுவிடன் நாடுகளது விமான உதவிகள் அடுத்த சில மணி நேரங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவிய பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்

வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். டசின் கணக்கான வீடுகளையும் தீ நாக்குகள் விழுங்கியிருக்கின்றன.

பொலீஸார் வீடுகளைத் தட்டி ஆட்களை வெளியேறுமாறு கேட்டுள்ளனர். அவசியமான பொருள்களையும் வளர்ப்புப் பிராணிகளையும் மட்டும் எடுத்துகெகொண்டு ஆயிரக்கணக்கானோர் தப்பி வெளியேறியுள்ளனர். தென் மேற்கு போர்தோ (Bordeaux)

மாகாணத்தில் வைன் தோட்டங்களால் பெயர் பெற்ற Gironde நகரை அண்டிய வனப் பிரதேசத்திலேயே செவ்வாய்க் கிழமை தீ பரவத் தொடங்கியது.

காய்ந்து வரண்ட தாவரங்களும் மரங்களும் தீ இலகுவாகவும் வேகமாகவும் பரவுவதற்கு வாய்ப்பாக உள்ளன. அப்பகுதியில்

வேண்டும் என்றே சதி வேலையாக

தீ மூட்டப்பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தென் மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் 40 பாகை வெப்பமும் அனல் காற்றும் தீயை முளாசி எரியச் செய்கின்றன. அது மேலும் வடக்கு நோக்கிப் பரவத் தொடங்கியுள்ளது. தீயணைப்புப்

பணிகளை நேரில் மேற்பார்வை செய்வதற்காகப் பிரதமர் எலிசபெத் போர்ன் இன்று வியாழக்கிழமை Gironde நகருக்கு விஜயம் செய்கிறார். உள்துறை அமைச்சரும்

அங்கு விரைகிறார்.

இதே தென்மேற்குப் பகுதிகளில் கடந்த ஜூலை மாத இறுதியிலும் பெரும் காட்டுத் தீ பரவியிருந்தது.

பல்லாயிரக் கணக்கான ஏக்கர் தாவர இனங்களும் காட்டு விலங்குகள், பறவைகளும் பேரழிவைச் சந்தித்திருந்தன.


ஐரோப்பிய வனவளத் தீ தகவல் அமைப்பின் (European Forest Fire Information System) தரவுகளின் படி பிரான்ஸில் இந்த ஆண்டு மொத்தம்

57,200 ஹெக்டேர் வனப் பிரதேசம் தீயினால் அழிந்துள்ளது. இது 2006-2021 காலப்பகுதியின் மொத்தமான காட்டுத் தீ அழிவுகளைவிட ஆறு மடங்கு அதிகமானது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.